Asianet News TamilAsianet News Tamil

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்; ஏப்ரல் 18க்கு தள்ளி வைப்பு!

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கில் மனுதாரர் தரப்பில் முக்கியத்துவம் வாய்ந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன

EVM VVPAT Paper Slip case interesting arguments in supreme court case adjourned to april18 smp
Author
First Published Apr 16, 2024, 4:57 PM IST

வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு செலுத்தினார்கள் என்பதை உறுதிபடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் வாக்கை செலுத்தியதும், 7 விநாடிகளுக்கு விவிபேட் ஒப்புகை சீட்டில் வாக்காளர் பதிவான தங்கள் வாக்கை சரி பார்க்க முடியும்.

மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்த்து உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதேபோல், தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் இன்று விசாரணைக்கு வந்தபோது, EVM-VVPAT இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் எப்படி 100% பொருந்தாமல் போகும் என்பதை புள்ளிவிவரங்களோடு விளக்கமளிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பிற்பகல் 2 மணிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

அதன்படி, நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ஒப்புகை சீட்டு இயந்திரத்தை கடந்த 2017 இறுதி வடிவத்திற்கு கொண்டு வந்தபோது, அதில் வெளிப்படையாகத் தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அதனை உள்ளிருந்து பல்பு எரிந்தால் மட்டுமே தெரியும் வகையிலான கண்ணாடியாக மாற்றி விட்டார்கள். தற்போது ஒப்புகைச் சீட்டு உள்ளே விழுகிறதா இல்லையா என்பது கூட வாக்காளர்களுக்கு தெரிவதில்லை என மனுதாரர் தரப்பு வாதிடப்பட்டது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் வாக்குச்சீட்டு முறைகே திரும்பி விட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்தியாவுடைய வாக்காளர் எண்ணிக்கை 1960களில் 50, 60 கோடி என்ற அளவில்தான் இருந்தது. ஆனால், தற்போது 97 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள் என்றாலும் கூட அத்தனை வாக்குகளையும் எப்போது எண்ணி முடிப்பது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒரு தேர்தலை நடத்துவதற்கு ஆறு வாரத்திற்கு மேல் தேர்தல் ஆணையம் எடுத்துக் கொள்கிறது அப்படி இருக்கும்போது ஒப்புகைச்சீட்டு சரி பார்க்க சில மணி நேரங்கள் கூடுதலாக தேர்தல் ஆணையம் செலவிடுவதால் ஒன்றும் தவறாகி விடாது என மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளையும் எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் என தேர்தல் ஆணையம் தனது பிரமாண பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

தொடர்ந்து, வாக்கு சீட்டுகளிலும், விவிபேட் சீட்டுகளிலும் பார் கோடு முறை போன்றவற்றை பயன்படுத்தலாம் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனை வழங்கியது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், ஒவ்வொரு முறையும் இப்படியான முறைகளை கொண்டு வருவது மிகப்பெரிய வேலையாக மாறிவிடும். அது மட்டுமில்லாமல் மனிதர்களின் தலையீடு எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ ஒருதலை பட்சம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் அங்கு இருக்கும். மனிதர்களின் தலையீடு இல்லாமல் எந்திரங்கள் செயல்படும் போது அவை பெரும்பாலும் சரியான முறையில் முடிவுகளை கொடுக்கின்றது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 2023: பிரதமர் மோடி வாழ்த்து!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எந்த வகையிலும் தவறாக பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்பட்டது இல்லை என்று கூறுவதாலேயே எதிர்காலத்திலும் அவ்வாறு நடக்காது என்ற உறுதியை யாராலும் சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஒரு தொகுதியில் 200 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றால் அதில் வெறும் இரண்டு சதவீத ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றது. அதை 100% சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்க கூடிய நிறுவனங்களின் இயக்குனர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். எனவேதான் இதன் நம்பகத்தன்மை பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருப்பதாக மனுதாரர் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், “2019 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள தரவுகளை மாநிலம் வாரியாக பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, சுமார் 373 தொகுதிகளில் முரண்பாடுகள் இருந்துள்ளதை சில தனியார் நிறுவனங்கள் என கண்டறிந்துள்ளன.  காஞ்சிபுரம், மதுரை,  தர்மபுரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுடன்,  எண்ணிப்பட்ட வாக்குகளுடன் பொருந்தி வரவில்லை.” என முக்கியத்துவம் வாய்ந்த வாதங்களை மனுதாரர் தரப்பு முன்வைத்தது.

இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துடன் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios