'தீவிரமான மக்கள் பணிக்கு திரும்புகிறேன்' ஆளுநர் பதவியை உதறிய தமிழிசை 'தில்' பேட்டி!
தீவிர மக்கள் பணிக்குத் திரும்பவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் ஆள்பவர்களின் ஆசியும் ஆண்டவனின் ஆசியும் தனக்கு இருப்பதாகவும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் தெரிவித்த பிறகே தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அனுப்பினேன் என்றும் இருவருக்கு எனது விருப்பத்திற்குத் தடை விதிக்கவில்லை என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் திங்கட்கிழமை காலை தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இதுவரை அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கையொப்பம் இடவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழிசை இன்று தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக மனம் உவந்து ராஜினாமா செய்து உள்ளேன் என்றார்.
பாமக பாஜகவுடன் கூட்டணி! இன்று இரவு ராமதாஸ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்
தெலுங்கானா மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் புதுச்சேரி மக்கள் காட்டிய அபரிவிதமான அன்பிற்கும் நன்றி உடையவளாக இருப்பேன் எனவும், ஆளுநராக வாய்ப்பளித்த உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு நன்றி என கூறினார்.
மேலும், இதே வேளையில் தனக்கு மக்களிடையே நேரடி பணியாற்றுவதே விருப்பம். இரண்டு மாநிலங்களிலும் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். தீவிரமான மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காக எனது விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்து உள்ளேன். இதனால் முதலில் எனது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ள பட வேண்டும். பின்னர் எனது வருங்கால திட்டங்கள் குறித்து அறிவிக்கிறேன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரிடம் தெரிவித்து விட்டு தான் எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன். எனது விருப்பம் என்ன என்பது இருவருக்கும் தெரியும் அதனால் எனது விருப்பத்திற்கு அவர்கள் தடை விதிக்கவில்லை. ஆளுநர் பதவி மூலமாக இன்னும் பல அனுபவம் கிடைத்துள்ளதாக கருதுகிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கு முதலமைச்சர்களையும், இரண்டு தேர்தல்களையும், ஆளுநர் ஆட்சியையும் நடத்தி இருக்கிறேன் கொரோனாவை சிறப்பாக கையாண்டதற்கு பாராட்டினையும் பெற்றுள்ளேன். இதனால் அனுபவம் அதிகமாகியுள்ளது.
நேரடியான நேர்மையான அரசியலுக்காக வந்துள்ளேன். இவ்வளவு வசதியான வாழ்க்கையை விட்டு செல்ல வேண்டுமா என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது. இந்த வசதியான வாழ்க்கையை விட்டு அரசியலுக்கு வருகிறேன் என்றால் மக்கள் எனது அன்பை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
தேனியைக் குறிவைக்கும் டிடிவி தினகரன்! முடிஞ்சா ஜெயிச்சு பாருங்க என சவால் விடும் முன்னாள் நண்பர்!