Vichithra: கவுண்டமணியிடம் இந்த பழக்கம் இருக்கு..! இதுவரை யாரும் சொல்லாத கசப்பான சம்பவத்தை கூறிய விசித்ரா!
காமெடி நடிகர் கவுண்டமணியிடம் இருக்கும், பழக்கம் குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான விசித்ரா.
1991-ஆம் ஆண்டு 'போர்க்கொடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக தன்னுடைய கேரியரை துவங்கியவர் விசித்ரா. ஆனால் இவர் நடித்த முதல் படம் வெளியாத நிலையில், 1992-ஆம் ஆண்டு வெளியான 'அவள் ஒரு வசந்தம்' திரைப்படமே இவரின் அறிமுகப்படமாக மாறியது.
இதை தொடர்ந்து, சின்னதாயே, தலைவாசல், தேவர்மகன், அமராவதி, சபாஷ் பாபு, எங்கள் முதலாளி, ஜாதி மல்லி என ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி கலந்த காமெடி வேடத்தை தேர்வு செய்து நடித்தார்.
ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் போது... அந்த நடிகர் கொடுத்த டார்ச்சர் காரணமாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசப்பான சம்பவத்தின் காரணமாகவும் திரையுலகை விட்டு மொத்தமாக விலக முடிவு செய்த விசித்ரா, ஹோட்டல் மேலாளர் ஷாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் விசித்ரா, சமீப காலமாக சின்னத்திரை சீரியல்களிலும், குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
குறிப்பாக 50 வயதை கடந்த பின்னரும்... பிக்பாஸ் வீட்டில் இளம் வயது பிரபலங்களுக்கு செம்ம டஃப் கொடுத்து விளையாடினார். இதுவே இவரின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. பிக்பாஸ் டைட்டில் வெல்ல தகுதி இருந்தும் கடைசி ஓரிரு வாரங்களில் தினேஷ்பற்றியும் , அவரின் குடும்ப வாழ்க்கை பற்றியும் இவர் பேசிய கருத்து விமர்சனங்களை சந்தித்த நிலையில்... குறைவான வாக்குகளுடன் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகர் கவுண்டமணி குறித்து கூறுகையில், 'நான் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன். ஒரு முறை பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த படத்தின் பூஜையிலும் நான் கலந்துகொண்டேன்'. அப்போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் என்னிடம் வந்து கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்ல வேண்டும் என கூறினார். நான் எதற்காக சார் என கேட்டேன். இல்ல நீ வந்து ஒரு வணக்கம் மட்டும் சொல்லு என கூறி என்னை அழைத்து சென்று வணக்கம் சொல்ல சொன்னார்.
நானும் வணக்கம் சொன்னேன். இதற்க்கு அவர் இப்போ தான் வணக்கம் சொல்லுவீங்களா... என கேட்டார். அவர் ஏன் அப்படி பேசினார் என்பது இப்போது வரை எனக்கு தெரியவில்லை. பொதுவாக அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஆனால், வணக்கம் சொல்வதற்கும், சினிமாவுக்கும் என்ன சம்மந்தம் என தெரியவில்லை. பின்னரே அவருக்கு வணக்கத்தை எதிர்பார்க்கும் பழக்கம் இருப்பதை புரிந்து கொண்டேன். இதுவும் என் வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத ஒரு கசப்பான சம்பவம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.