113 ஆண்டுகளுக்கு முன்பாக, கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தென்கொரிய கடல் பகுதியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1905ம் ஆண்டு ரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போது ரஷ்ய கடற்படையை சேர்ந்த திமித்ரி டான்ஸ்கோய் என்ற போர்க்கப்பலை, ஜப்பான் கடற்படையினர் குண்டுவீசி தகர்த்தனர். இந்த போர்க்கப்பல், தென்கொரியா அருகே உள்ள உல்லெங்டோ என்ற தீவின் அருகே மூழ்கடிக்கப்பட்டது.
கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பலில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய தங்கக்கட்டிகளும், நாணயங்களும் சுமார் 5,500 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, தகவல் வெளியானது. இவற்றின் இன்றைய மதிப்பு சுமார் 133 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதுபற்றி எந்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் இல்லை. ரஷ்யா தரப்பிலும் விளக்கம் எதுவும் தரப்படவில்லை. ஆண்டுகள் பல உருண்டோடிய நிலையில், கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பலை தேடும் பணிகளில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, ஷினில் குரூப் என்ற கம்பெனி இதற்காக தென்கொரியா, சீனா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்தி, இந்த கப்பலை தேடும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த தேடுதலின் பலனாக, தென்கொரியாவின் உலெங்டோவ் தீவை ஒட்டிய கடல்பரப்பில் சுமார் 430 மீட்டர் ஆழத்தில், திமித்ரி டான்ஸ்கோய் கப்பல் மூழ்கியுள்ளதாக, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஏராளமான குண்டுகளால் துளைக்கப்பட்டதற்கான அடையாளம் காணப்படுவதாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், கப்பலின் உள்பகுதிகள் அதிகம் சேதமாகவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், கப்பலில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் தங்கக் கட்டிகள், நாணயங்கள் எங்கே உள்ளன என்பது பற்றி சரியாக தெரியவில்லை என்றும் தேடுதல் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி அடுத்தடுத்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதன் மூலமாக உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது. தங்கக்கட்டிகள் அந்த கப்பலில் இருக்கிறதா இல்லையா என்பதற்கான பதில் விரைவில் தெரியும் என்று, சம்பந்தப்பட்ட தேடுதல் பணியை மேற்பார்வை செய்யும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.