
கடலில் 18 ஆண்டுகளாக மிதந்துவந்த உலகின் மிகப்பெரிய பனிமலை, புவி வெப்பமயமாதல் காரணமாக உருகிவருவதாக நாசா அறிவித்துள்ளது.
அண்டார்டிகா கண்டத்தில் பனிமலைகள் அதிகமாக உள்ளன. புவி வெப்பமயமாதல் காரணமாக அந்த பனிமலைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகியும் உடைந்தும் பிரிந்துவிடுகின்ரன. இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு அண்டார்டிகாவின் ராஸ் ஐஸ் ஷெல்ஃப் என்ற பகுதியிலிருந்து உலகின் மிகப்பெரிய பனிமலை உடைந்து கடலில் மிதந்து செல்ல தொடங்கியது.
296 கி.மீ நீளமும் 37 கி.மீ அகலமும் கொண்ட அந்த பனிமலைக்கு பி-15 என பெயரிடப்பட்டது. கடலில் மிதந்து செல்ல தொடங்கிய அந்த பனிமலை, வெப்பமயமாதல் காரணமாக உருகி வருகிறது. கடந்த மாதம் சர்வதேச விண்வெளி மையம், அட்லாண்டிக் பெருங்கடலில் மிதந்து வந்த பி-15 பனிமலையை படம் எடுத்தனர். அப்போது அது 18 கி.மீ நீளமும் 9 கி.மீ அகலமும் கொண்டிருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக விவரித்துள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பனிமலையின் நடுவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் பனிமலை உருகினாலோ பல துண்டுகளாக உடைந்தாலோ, அதை தொடர்ந்து கண்காணிக்க முடியாது எனவும் கடந்த 18 ஆண்டுகளாக கடலில் மிதந்து கொண்டிருந்த உலகின் மிகப்பெரிய பனிமலை விரைவில் இருந்த இடம் தெரியாமல் உருகி காணாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளது.