கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படலாம்.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Apr 25, 2020, 8:42 PM IST
Highlights

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. இதுவரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்தை நெருங்கிவிட்டது. சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 8 லட்சத்து 16 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், 5200க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத போதிலும், அந்த வைரஸின் தன்மையை அறிந்து அதற்கேற்ப சிகிச்சையளிப்பதால் பெரும்பாலானோர் குணமடைந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 960 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 

கொரோனாவால் அதிகமானோர் குணமடைந்துவருவது நம்பிக்கையளித்துவரும் இந்த வேளையில், உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு மீண்டும் கொரோனா தொற்றாது என்ற ஒரு தகவல் பரவிவந்தது. 

இந்நிலையில், அது தவறான தகவல் என்றும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

ஒருமுறை கொரோனா தாக்கி, அதிலிருந்து மீண்டவர்களுக்கு உடலில் வைரஸ் எதிர்ப்பு ஆண்டிபாடிகள் இருக்கும் என்றும் அதனால் அத்தகைய நபர்கள் நோய் பரப்பும் ஆபத்தற்றவர்கள் என சான்றிதழ் அளித்து பயணம் செய்வதற்கோ பணி புரிவதற்கோ அனுமதிக்கலாம் என்று சிலி உள்ளிட்ட சில நாடுகள் தெரிவித்திருந்தன. 

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோய் பரப்பும் ஆபத்தற்றவர்கள் என்று சான்றளிப்பதெல்லாம் பொது சுகாதார விதிமீறல். கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உடம்பில் ஆண்டிபாடிகள் இருக்கும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாகலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
 

click me!