பாட்டு பாடியதால் 74 முறை சவுக்கடி வாங்கிய பெண்! நடந்தது என்ன?

Published : Nov 25, 2026, 12:59 PM IST
woman receives 74 lashes for singing a song what happened

சுருக்கம்

ஈரானில் ஹிஜாப் அணியாமல் இணையத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியதற்காகப் பாடகி பரஸ்தூ அகமதி மற்றும் 4 கலைஞர்களுக்குத் தலா 74 முறை சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகள் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் உலக அளவில் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

ஈரானில் ஹிஜாப் அணியாமல் இணையத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியதற்காகப் பாடகி பரஸ்தூ அகமதிக்கு 74 முறை சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவருடன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நான்கு பேருக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்தப் பரஸ்தூ அகமதி?

ஈரானைச் சேர்ந்த 29 வயது பாடகி பரஸ்தூ அகமதி. பாரம்பரிய ஈரானியப் பாடல்களைப் பாடிவரும் இவர், 2024 டிசம்பர் மாதம் இணையத்தில் ஒளிபரப்பிய இசை நிகழ்ச்சியால் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

ஈரானில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், ஆண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அதேபோல், பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறி அகமதி இசை நிகழ்ச்சி நடத்தியதுதான் அவருக்கு எதிரான வழக்குக்குக் காரணமானது.

அப்படி என்ன செய்தார்?

2024 டிசம்பர் 11-ம் தேதி, ஈரானின் காம் (Qom) நகருக்கு அருகிலுள்ள பழமையான டெய்ர் காசின் (Deyr Gachin) காரவன்செராய் வளாகத்தில் அகமதி இசை நிகழ்ச்சியைப் பதிவு செய்தார். பாரம்பரிய கட்டடத்தின் பின்னணியில், பெரிய பாரசீக விரிப்பு ஒன்றுடன் எளிமையான மேடை அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் யாரும் இல்லாத அந்த மேடையில், ஆண் இசைக்கலைஞர்களுடன் இணைந்து அவர் பாடல்களைப் பாடினார்.

அந்த நிகழ்ச்சியில் அகமதி ஹிஜாப் அணியவில்லை. கைகளை வெளிப்படுத்தும் நீளமான உடை அணிந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை தனது யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பினார். பின்னர் அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது.

அகமதி தனது நிகழ்ச்சியை ஒரு கற்பனையான இசை நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார். தான் விரும்பும் மக்களுக்காகப் பாடுவது தனது உரிமை என்றும், அந்த உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.

எதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது?

இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து அகமதிக்கும் அவருடன் பணியாற்றிய குழுவினருக்கும் எதிராக ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பொதுமக்களின் ஒழுக்கத்தைச் சீர்குலைத்தல், ஒழுக்கக்கேடான மற்றும் ஆபாசமான உள்ளடக்கத்தை இணையத்தில் தயாரித்து வெளியிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

2026 ஜூன் மாதத்தில் காம் நகரின் குற்றவியல் நீதிமன்றம் அகமதி உள்ளிட்ட ஒன்பது பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை விதித்தது. அவர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோதும், செப்டம்பர் மாத இறுதியில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததாக அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

74 முறை சவுக்கடி தண்டனை நிறைவேற்றம்!

இந்நிலையில், நவம்பர் 23-ம் தேதி திங்கள்கிழமை, அகமதிக்கும் அவருடன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நான்கு பேருக்கும் தலா 74 முறை சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனை அவர்களது வழக்கறிஞர் மொஸ்தஃபா நிலி ஈரானிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பாடகி அகமதியுடன் இசைக்கலைஞர்கள் சோஹெயில் ஃபகிஹ்-நசிரி, அமின் தஹேரி, அமிரலி பிர்னியா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மொஹ்சென் லஷ்கரி ஆகியோருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மொத்தம் ஒன்பது பேர் தண்டிக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஐந்து பேருக்கு மட்டுமே சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள நான்கு பேருக்கு என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை.

சவுக்கடி தண்டனையுடன், அகமதி மற்றும் அவருடன் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் இசை மற்றும் கலைச் செயல்பாடுகளில் ஈடுபடவும், ஈரானை விட்டு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் கண்டனம்!

ஒருவர் பாடல் பாடியதற்காகவும், விரும்பிய உடையை அணிந்ததற்காகவும் உடல் ரீதியான தண்டனை வழங்குவது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கலைஞர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் சவுக்கடி தண்டனை கொடூரமான, மனிதாபிமானமற்ற தண்டனையாகவும், சித்திரவதைக்கு எதிரான சர்வதேசத் தடையை மீறும் செயலாகவும் விமர்சிக்கப்படுகிறது.

சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) உள்ளிட்ட அமைப்புகள், இந்தத் தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தன. இருப்பினும், மேல்முறையீட்டுக்குப் பிறகும் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானில் ஹிஜாப் கட்டுப்பாடுகள் ஏன் சர்ச்சையாக உள்ளன?

1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானில் பெண்கள் பொது இடங்களில் தலைமுடியை மறைக்கும் ஹிஜாப் அணிவதும், உடலை மறைக்கும் தளர்வான ஆடைகளை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது கைது, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

2022 செப்டம்பரில் மஹ்சா அமினி என்ற 22 வயது குர்திஷ் பெண், ஹிஜாப் விதிகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டில் ஈரானின் அறநெறிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவலில் இருந்தபோது அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பெண்கள் ஹிஜாபைக் கழற்றி வீசியும், எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அந்தப் போராட்டங்களுக்குப் பிறகு ஈரானின் பல பகுதிகளில் பெண்கள் ஹிஜாப் அணியாமல் பொது இடங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால் ஹிஜாப் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக அரசுக்கும் பெண்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்தச் சூழலில், ஹிஜாப் அணியாமல் பாடியதற்காகப் பரஸ்தூ அகமதிக்கு 74 முறை சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது, ஈரானில் பெண்களின் தனிநபர் சுதந்திரம் மற்றும் கலை வெளிப்பாட்டுக்கான உரிமை குறித்த விவாதத்தை மீண்டும் சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Train Brakes : ரயில் பிரேக் ஃபெயில் ஆனா என்ன ஆகும் தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சம்பளத்தில் பாதி 47% வரி.. ஆனாலும் சொர்க்கம்தான்; நார்வேயில் 15 ஆண்டுகள் வாழ்ந்த இந்தியர் சொன்ன அதிர்ச்சி உண்மைகள்!
1,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தற்கொலை! கசிந்த ஆவணங்கள் சொல்லும் அதிர்ச்சித் தகவல்!