உஷார்… கொரோனா பாதித்தவர்களை ஓமைக்ரான் எளிதாக தாக்கும்… எச்சரிக்கை விடுக்கும் WHO!!

By Narendran S  |  First Published Nov 29, 2021, 9:55 PM IST

கொரோனா தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை ஓமைக்ரான் வகை வைரஸ் எளிதாக தாக்கும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொரோனா தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை ஓமைக்ரான் வகை வைரஸ் எளிதாக தாக்கும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் இந்த ஒமைக்ரான் வகை வைரசால் உலக மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் மூலம் எளிதாக மீண்டும் தொற்று ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுக்குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில், B.1.1.529 எனும் இந்த புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது எனக் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

கொரோனாவின் ஓமைக்ரான் மாறுபாடு பற்றிய ஆரம்ப கால ஆராய்ச்சியில், இந்த மாறுபாட்டில் மறுதொற்று ஏற்படும் ஆபத்து அதிகரிக்கக்கூடும் என்பதைக் காட்டுவதாகவும், அதாவது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக மீண்டும் எளிதில் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக முக்கிய சுழற்சி வடிவமான டெல்டாவிற்கு எதிரானவை, கடுமையான நோய் மற்றும் இறப்பு விகிதத்தை குறைப்பதில் முக்கியமானவை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. தற்போதைய தடுப்பூசிகள் தீவிர நோய் மற்றும் மரணத்தைத் தடுப்பதில் இன்னும் பயனுள்ளதாக உள்ளதாகவும் முந்தைய மாறுபாடுகளுடன் தாங்கள் கவனித்ததைப் போல, பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிசிஆர் சோதனைகள் தொற்று, ஓமைக்ரான் தொற்று ஆகியவற்றைக் கண்டறியத் தொடர்கின்றன என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிள்ளது. விரைவான ஆன்டிஜென் கண்டறிதல் சோதனைகள் போன்ற பிற வகையான சோதனைகள், ஏதேனும் தாக்கம் உள்ளதா என்று பார்க்க ஆய்வு செய்யப்படுவதாகவும் தென்னாப்பிரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஓமைக்ரானின் பல அம்சங்களை நன்கு புரிந்து கொள்ள ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளை அவை கிடைக்கும் போது தொடர்ந்து பகிர்ந்து கொள்வார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஓமைக்ரான் வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. மேலும் இது தனது புரோத ஸ்பைக்கில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளைக் கொண்டிருப்பதால் இது அதிக ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் எதிலும் இந்தளவு மாறுபாடுகள் இருந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மேலும் இந்தியாவில் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படும் என்றும் முடிகள் வரும் வரை விமான நிலையத்தில் தங்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!