ட்ரம்ப் ஜனாதிபதி ஆன பிறகு சுமார் 1,490 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. எனவே இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் நாட்டின் எந்த ஒரு ஜனாதிபதியையும் விட ட்ரம்ப் சிறந்தவர்.
அமெரிக்காவில் இதுவரை எந்த ஜனாதிபதியும் விட இந்தியாவுடன் உறவு பாராட்டுவதில் ட்ரம்ப் சிறந்து விளங்குகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது.இந்தப் பேரிடருக்கு மத்தியிலும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ளது. வருகிற நவம்பர்-3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதியாக மீண்டும் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ-பிடன் களம் காண்கிறார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறமிருந்தாலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள இந்திய வம்சாவளியினரை கவரும் வகையில் பிடனும், டரம்பும் மாறி மாறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்தியா குறித்து உரையாற்றிய ஜோ பிடன், அமெரிக்க தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இந்தியா தற்போது எல்லையில் சந்தித்துவரும், பிரச்சினைகளிலும், அச்சுறுத்தல்களும், அந்நாட்டுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத்தை, அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும், பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்போம். அதேபோல் தெற்காசியாவில் எல்லையில் நிகழும் பயங்கரவாத நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது என பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் எச்சரித்தார்.
.இந்நிலையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவை குறிக்கும் வகையில், வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எந்தவொரு ஜனாதிபதியையும் விட, இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதில் ட்ரம்ப் சிறந்தவர். எதிர்வரும் காலங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு இன்னும் சிறப்பாக இருக்கும். அதே போல் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு கவுன்சிலின் கூற்றுப்படி ட்ரம்ப் நிர்வாகத்தின் போது மட்டுமே , இந்தியாவுக்கு ஆயுதங்கள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கிய பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்கவில்லை, ஆனால் ட்ரம்ப் ஜனாதிபதி ஆன பிறகு சுமார் 1,490 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. எனவே இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் நாட்டின் எந்த ஒரு ஜனாதிபதியையும் விட ட்ரம்ப் சிறந்தவர். கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் பல துறைகளில் தொடர்பை விரிவுபடுத்தி உள்ளார். ட்ரம்ப் ஜனாதிபதி ஆனவுடன் MQ-9 ஆளில்லா வான்வழி அமைப்பை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
அதேபோல் எதிர்வரும் நாட்களில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த அவர் தொடர்ந்து பணியாற்றுவார், கொரோனா நோய்த்தொற்றுக்குப்பிறகு இந்தோ அமெரிக்கர்கள் ஒன்றுபட்டுள்ளனர். இரு நாடுகளில் இருந்தும் பார்மா நிறுவனங்கள் உலக அளவில் தொடர்ந்து உலகளாவிய மருந்துகளை வழங்குகின்றன. இந்த மூன்று ஆண்டில் 3 பில்லியன் டாலர்( 224 கோடி) மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தானது. இதன் கீழ் அமெரிக்கா எம் எச்-60 ஆர் நேவல் ஹெலிகாப்டர் மற்றும் ஏ எச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
அதேபோல் குஜராத்தில் நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வில் 1.1 மில்லியன் மக்கள் மத்தியில் ட்ரம்ப் உரையாற்றினார். இந்த திட்டங்கள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பரஸ்பர உறவை பலப்படுத்தியுள்ளன. அதேபோல் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கப்பல்களின் இயக்கத்தை எளிதாக்குவதற்கு இந்தியாவும்,அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டன. இதனால் உலகளாவிய விநியோகச் சங்கிலி மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டாக 2019 செப்டம்பரில் கூட்டம் நடத்தினர் இது இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுபடுத்தியுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.