சர்வாதிகார ஆட்சியின் கீழ் தான் வாழ்கிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு வட கொரிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் உண்மை. ஏனெனில் அவர்களுக்கு மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது அல்லது உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாது.
வாழும் சர்வாதிகரிகளில் கொடூரமாகவும், அஞ்சி நடுக்கத்தை ஏற்படுத்துபவருமான கிம் ஜாங் உன்கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் ரகசியமான நாடாகவும், உலக நாடுகளிடம் இருந்து ஒதுங்கி தனித்திருக்கும் நாடாகவும் வடகொரியா கருதப்படுகிறது. அங்கு வசிக்கும் மக்கள் மூச்சு விட வேண்டும் என்றால் கூட, கிம்மின் உத்தரவை பெற வேண்டும்.
அங்கு கிம் ஜாங் உன் சொல்வது மட்டுமே வேதவாக்கு. ஒருவேளை அரசையோ அல்லது அதிபரையோ ஒருவர் விமர்சித்தால், அவர் உயிரை விடுவதை தவிர வேறு வழி இல்லை. அத்தகைய கொடூர சர்வாதிகார ஆட்சியின் கீழ் அந்நாட்டு மக்கள் உள்ளனர்.
நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அங்கு கடுமையான சட்டதிருத்தங்கள் உள்ளன. பல அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கு கூட வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் மர்மமான நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டாலும், இங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர்.
வடகொரியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமாகும். ஆனால் நம் நாட்டை போலவோ அல்லது மற்ற நாடுகளை போலவோ அங்கு நிறைய வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள். ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிடுவார். அவருக்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. எனவே கிம் குடும்பத்தினர் மட்டுமே அங்கு பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். நாட்டின் அதிபரான கிம்-க்கும், அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே அந்நாட்டு மக்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்.
கிம்மின் தாத்தா கிம் இல் சுங் நாட்டில் அதிகமாக மதிக்கப்படுபவர். வட கொரியர்கள், அவரை நாட்டின் தந்தை என்று கருதுகின்றனர். 1945 இல் வட கொரியாவில் ஜப்பானிய ஆட்சி முடிவடைந்த பின்னர், அவர் தனது ஆட்சியை நிறுவினார். அதன்பிறகு, அவரது குடும்பம் மட்டுமே, ஆட்சி செய்து வருகின்றனர். வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங் மற்றும் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன்னின் தந்தை அவரது மகன் கிம் ஜாங் இல் ஆகியோரின் மில்லியன் கணக்கான உருவப்படங்கள், மொசைக் மற்றும் ஓவியங்கள், தங்கள் நாட்டில் கிம் வம்சத்தின் நாட்டிற்கு ஆற்றிய முக்கிய பங்கைப் பற்றி மக்களுக்கு தினசரி நினைவூட்டுகின்றன.
இவை ஒருபுறம் இருந்தாலும், சர்வாதிகார ஆட்சியின் கீழ் தான் வாழ்கிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு வட கொரிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் உண்மை. ஏனெனில் அவர்களுக்கு மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது அல்லது உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாது. அந்நாட்டில் இணையதளத்திற்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசு ஊடகம் என்ன செய்தி வெளியிடுகிறதோ அதை மட்டுமே அவர்கள் பார்க்க முடியும்.
கடந்த சில மாதங்களாக, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பொது வாழ்க்கையிலிருந்து காணாமல் போனது அவரது உடல்நிலை குறித்த பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. அவரது தனது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் சில அதிகாரங்களை ஒப்படைத்துள்ளார் என்று வெளியான தகவல்கள் அந்த சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிம்மிற்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு அவரது உடல்நலம் மோசமடைந்து வந்ததாக கூறப்படுகிறது. மற்ற ஜனநாயக நாடுகளைப் போலல்லாமல், உலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் வடகொரியா அடுத்தடுத்த திட்டத்தை கொண்டிருக்கவில்லை. அங்கு 1948 முதல் கிம்மின் குடும்பம் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு, 36 வயதான கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிபரானார்.
கிம்மின் தாத்தா கிம் இல் சுங் 1948 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த போது, அவரைச் சுற்றி ஆளுமை வழிபாட்டு முறை வளர்ந்தது. அது பின்னர் அவரது வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது. அவரது மகன் கிம் ஜாங் இல் மற்றும் பேரன் கிம் ஜாங் உன் ஆகியோர் தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றனர்.
ஒரு ஜனநாயக நாட்டில், உதாரணமாக இந்தியா போன்ற நாடுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் திறமையற்றவராக இருந்தால் அல்லது வேறு சில காரணங்களால் தனது கடமைகளைச் செய்ய முடியாவிட்டால், அரசு விவகாரங்களை நடத்துவதற்கு நாட்டின் அரசியலமைப்பால் அதிகாரம் பெற்ற அமைப்புகள், நெறிமுறைகள் மற்றும் பதவிகள் உள்ளன.
ஆனால் வட கொரியாவில், தலைவர் கிம் பரம்பரையை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். எனவே கிம் ஜாங் உன் உயிரிழந்தது உண்மை என்ற பட்சத்தில், அவரது மகன்களுக்கு பதவி வரும். ஆனால் கிம்மிற்கு 3 மகன்கள் உள்ளனர் எனவும், அவரது மூத்த மகன் 2010-ல்இல் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆகவே, நாட்டின் விவகாரங்களை நடத்துவதற்கான பொறுப்புகள் அவரது சகோதரி கிம் யோ ஜாங்கின் தோள்களில் உள்ளன. ஏனெனில் வட கொரியத் தலைவர் நம்பும் ஒரே ஒரு நபர் அவர் மட்டும் தான்.
அண்டை நாடான தென் கொரியாவின் புலனாய்வு அமைப்பு, கிம் தனது சகோதரியை உண்மையான இரண்டாவது அதிகார மையமாக மாற்றியுள்ளார் என்று கூறுகிறது. சியோல் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகளுக்கான பொறுப்பை கிம் தனது சகோதரிக்கு ஒப்படைத்துள்ளார் என்றும அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு வியட்நாமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பின் போது கிம் யோ ஜாங் பிரபலமடைந்தார். அந்த சந்திப்பின் போது அனைத்து ஏற்பாடுகளையும், அவரது சகோதரி சிறப்பாக செய்திருந்தார். ஒருவேளை கிம் இறந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு அடுத்ததாக, அவரது சகோதாரி தான் ஆட்சி அதிகாரித்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது. மேலும் வடகொரியாவில் கிம் தெய்வமாக கருதப்படுவதால், அவரின் இறப்பு குறித்த செய்தி நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பலாம்.
அதனால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, கிம்மின் இறப்பு செய்தியை வெளியிடலாம் என்றும் தெரிகிறது. எனினும் கிம் உடல்நிலை குறித்து வடகொரிய அரசு ஊடகங்கள் வாய்திறக்காத நிலையில், தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்த பிறகே கிம் ஜாங் உன்னின் உண்மை நிலை உலகிற்கு தெரியும்...!