பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதற்கு முன்னதாக நேற்று கருத்து தெரிவித்து இருந்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இம்ரான் கான் மீதான இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விளாசி இருந்தது. சட்டத்திற்கு மாறாக இம்ரான் கான் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் இன்று அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதற்கிடையே இம்ரான் கான் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் தெரீக் இ இன்சாப் கட்சித் தலைவர் முஸாரத் ஷாம்ஷெட் சீமா உடன் இம்ரான் கான் பேசி இருக்கும் அந்த ஆடியோ தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த ஆடியோவில், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள், பாகிஸ்தான் தலைமை நீதிபதி குறித்து பேசி இருப்பது வெளியாகியுள்ளது.
இம்ரான்கான் கைது சட்டவிரோதமானது… அவரை விடுவிக்க வேண்டும்... பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி!!
அவர்களது உரையாடலில் கானிடம், ''தற்போது நாங்கள் உயர்நீதிமன்றத்தில் இருக்கிறோம். எங்கள் முன்னாடி கான் சாகிப்பை கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். உங்களது வழக்கையும் தலைமை நீதிபதி விசாரிப்பார்'' என்று முஸாரத் ஷாம்ஷெட் சீமா பேசுவது தெரிய வந்துள்ளது.
அடுத்து தனது கைதை விமர்சித்து பேசிய இம்ரான் கான், உச்ச நீதிமன்றத்தில் தனது வழக்கை தொடர்ந்து நடத்துமாறும், ''தலைமை நீதிபதி என்ன செய்து கொண்டு இருக்கிறார்''. அசாம் உடன் பேசுங்கள். மற்றவர்களுடனும் பேசுங்கள்'' என்று கோபமாக கேட்பது வெளியாகியுள்ளது. இது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை விமர்சித்து இருப்பதால், ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் எழலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றமே இம்ரான் கானுக்கு சாதகமாக நேற்று தீர்ப்பு அளித்து இருப்பதால், ஜாமீன் எளிதில் கிடைக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஊழல் தடுப்பு ஏஜென்சி காவலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்?
இன்று மூன்று நபர் நீதிபதிகள் அடங்கிய இஸ்லாமாபாத் நீதிமன்றத்தின் முன்பு இம்ரான் கான் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரானுக்கு இன்று ஜாமீன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 9ஆம் தேதி அல்-காதர் அறக்கட்டளை ஊழல் தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்து இருந்தனர்.