புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி நிறுவனம் செலவுகளைச் சமாளிக்கும் நோக்கில் 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய கேளிக்கை நிறுவனங்களில் ஒன்றான வால்ட் டிஸ்னி தனது 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பாப் இகர் பதவியேற்ற பிறகு எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
“நான் இந்த முடிவை எடுப்பது எளிதாக இருக்கவில்லை. உலகம் முழுவதும் டிஸ்னி ஊழியர்களின் திறமையிலும் அர்ப்பணிப்பிலும் மரியாதை வைத்திருக்கிறேன்” என்று பாப் இகர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது டிஸ்னி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு இப்போது மீண்டும் பணிநீக்க நீக்க நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.
டிஸ்னி நிறுவன ஸ்ட்ரீமிங் இணையதளமான டிஸ்னி பிளஸ் தளத்தில் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதால், அதை ஈடுசெய்யும் வகையில் செலவைக் குறைப்பதற்காகவே 7 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர் என்றும் டிஸ்னி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி டிஸ்னி பிளஸ் இணையதளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 16.81 கோடி. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1 சதவீதம் குறைந்திருக்கிறது.