கொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுது!உலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

By karthikeyan VFirst Published Apr 3, 2020, 10:12 PM IST
Highlights

கொரோனாவிற்கு அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை எலிகள் மீது பரிசோதித்ததில், கொரோனாவிற்கு எதிராக திறம்பட அந்த மருந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துவருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது. பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்துவிட்டது.

கொரோனாவிற்கு மருந்து இல்லாத நிலையில், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று சாமானியர்கள் முதல் உயர் பாதுகாப்பு கொண்ட மிகப்பெரிய உலகத்தலைவர்கள் வரை பாரபட்சமின்றி பாதித்துள்ளது.

ஃப்ரான்ஸ் விஞ்ஞானி ஒருவர் க்ளோரோகுயினுடன் மலேரியாவிற்கான ஆண்டிபயாடிக்கையும் சேர்த்து கொடுத்து, ஃப்ரான்ஸின் நீஸ் நகர மேயர் மற்றும் அவரது மனைவி இருவரையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றியதாக கூறினார். ஆனால் க்ளோரோகுயினை கொரோனாவிற்கான தடுப்பு மருந்தாக அங்கீகரிக்கப்படவில்லை. அதேவேளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து இளவரசர் சார்லஸை பெங்களூருவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் குணமடைய வைத்துவிட்டதாக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவிலிருந்து உலகளவில் ஏராளாமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும் கொரோனாவிற்கான பிரத்யேக தடுப்பு மருந்து ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடித்து அதை எலிகள் மீது பரிசோதனை செய்து, அந்த பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோவிட் 19 என்ற கொரோனா வைரஸூக்கு முன்னோடியான SARS-CoV(2003ம் ஆண்டு) மற்றும் MERS-CoV(2014) ஆகிய இரண்டு வைரஸுக்கும் மருந்து கண்டுபிடிப்பதில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அறிவியலாளர்கள் குழு, கோவிட் 19-க்கும் தடுப்புமருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. 

பிட்ஸ்பர்க் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள மருந்துக்கு PittCoVacc என்று பெயர் சூட்டியுள்ளனர். விரல் நுனு போன்று தோற்றமுடைய Band-aid போன்று ஒட்டக்கூடிய தன்மையுடையதாக அது உள்ளது. அதை உடலில் ஒட்டியவுடன், அதிலிருந்து கொரோனாவிற்கு எதிராக செயல்படக்கூடிய நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்து வீரியமாக பணிபுரிந்திருக்கிறது. மருந்தை ஊசி மூலமாகவோ, மாத்திரையாகவோ செலுத்தாமல், ஒட்டும்வகையில் உருவாக்கியுள்ளனர். அதனால் அதிலிருக்கும் சுமார் 400 மைக்ரோநீடில்ஸ்( மிக மிக நுண்ணிய ஊசிகள்) மூலமாக மருந்து துரிதமாகவும் கொரோனாவிற்கு எதிராக வலுவாகவும் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை இந்த மருந்து சிறப்பாக மட்டுப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எலிகள் மீது செய்த பரிசோதனையில் கொரோனாவிற்கு எதிராக இந்த மருந்து சிறப்பாக செயல்பட்டு கொரோனா வைரஸின் தாக்கத்தை மட்டுப்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே இந்த மருந்தை அடுத்ததாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம்(FDA) சமர்ப்பித்து, அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை பெற பிட்ஸ்பர்க் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்பின்னர் முதல் கட்டமாக மனித உடலில் இந்த மருந்து பரிசோதிக்கப்படும். அப்போதும் வெற்றியடைந்துவிட்டது என்றால், பின்னர் சந்தைக்கு வரும். ஆனால் எப்படியும் இந்த பிராஸஸ் முடிவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும். எனவே இப்போது இந்த மருந்தை பயன்படுத்த முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் பிட்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் உள்ளனர். 
 

click me!