
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதிக வரி விதிப்பதை கடுமையாகச் சாடிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இது மிகவும் நியாயமற்றது என்றும், அந்நாடுகள் மீது அமெரிக்காவும் அடுத்த மாதம் முதல் அதே அளவுக்கு வரி விதிக்கத் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நாடுகள் மீது அவர்களுக்கு ஈடான வரி விதிப்பு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் கூறினார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், அந்த நாடுகள் அமெரிக்க ஏற்றுமதி பொருள்கள் மீது விதிக்கும் அதே வரியை விதிக்க இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், செவ்வாய்க்கிழமை அமெரிக்க காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றி இருக்கிறார். கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், "மற்ற நாடுகள் பல பத்தாண்டுகளாக நமக்கு எதிராக அதிக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக நாமும் அதே அணுகுமுறையைத் தொடங்க வேளை வந்துவிட்டது" என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு நன்றி சொன்ன டொனால்ட் டிரம்ப்.. ஏன் தெரியுமா.?
"ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக வரியை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது" என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆட்டோ துறையில் இந்தியா அமெரிக்காவிடம் 100% க்கும் அதிகமான வரியை வசூலிக்கிறது என்று டிரம்ப் குறை கூறினார்.
ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரிகள் அமலுக்கு வரும் என்ற டிரம்ப், "மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், நாமும் அவர்கள் மீது அதே வரியை விதிப்போம். அவர்கள் நம்மை தங்கள் சந்தையிலிருந்து விலக்கி வைக்கும் வகையில் வரிகளை வசூலித்தால், அவர்களை நாமும் சந்தையிலிருந்து விலக்கி வைப்போம்" என்றும் டிரம்ப் கூறினார்.
சென்ற பிப்ரவரி மாதமே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மீது விரைவில் அவர்களுக்கு ஈடான வரியை விதிக்க இருப்பதாக டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோதும், டிரம்ப் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியாவும் அமெரிக்காவின் வரிகளில் இருந்து தப்ப முடியாது என்பதை பிரதமர் மோடியிடம் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இது குறித்து "யாரும் என்னுடன் வாதிட முடியாது" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
டிரம்ப்பின் புதிய வரிகளுக்கு சீனா பதிலடி; அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதிக்கு வரி விதிப்பு!