உலகை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்..?

By Manikandan S R SFirst Published Apr 21, 2020, 9:24 AM IST
Highlights

வடகொரிய அதிபரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கின்றன

உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை விளைவிக்கும் நிலையில் அந்நோயினால் எந்தவித பாதிப்பும் தங்களுக்கு இல்லை என்று கூறி அமைதியாக இருக்கும் நாடு வடகொரியா. சீனாவுக்கு அருகே இருந்தாலும் தனது எல்லைகளை தொடக்கத்திலேயே மூடி இருந்ததால் கொரோனா பாதிப்பு இல்லை என்று அண்மையில் தெரிவித்தது. உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்யும் அளவிற்கு அணு ஆயுத சோதனை, அமெரிக்காவுடன் மோதல் போக்கு என வடகொரியா தனது பெயரை எப்போதும் முன்னிலைப்படுத்தி வந்தது. இதன் காரணமாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உலகத் தலைவர்களிடையே அதிக கவனம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் வேலைப்பளு காரணமாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்த கிம் ஜாங் உன்னிற்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன்காரணமாக தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இறுதியாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளி உலகத்தில்  தோன்றிய அவர் அதன்பிறகு எங்கும் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக வடகொரியாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் வடகொரிய அந்நாட்டை கட்டமைத்தவரும் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் சங் பிறந்த நாள் கொண்டாட்டம் ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் அதில் அவர் கலந்து கொள்ளாதது மேலும் சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது. எனினும் அந்நாட்டு அரசு எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வடகொரிய விவகாரங்களை கவனிக்கும் அமெரிக்காவின் சி.என்.என் நிறுவனம் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்று கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்து பலமுறை செய்திகள் வந்திருப்பதால் நிலைமையை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

click me!