
கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் அழுத்ததுக்கு அவர் பணிந்துள்ளார். நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் முதலில் உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்த அமெரிக்கா இப்போது ரஷ்யாவுடன் இணைந்து போரை நிறுத்த முயற்சித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போரில் தேவையில்லாமல் செலவு செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவது குறித்து அமெரிக்கா அதிகாரிகளும், ரஷ்யா அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மறுத்தார். இதன்பிறகு உக்ரைன் அதிபரை கடுமையாக விமர்சித்த டிரம்ப், போருக்கு காரணம் உக்ரைதான் என்றும் அமெரிக்கா போருக்கு செலவழித்த தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உக்ரைனில் இருக்கும் கனிம வளங்கள் மீது டிரம்ப் குறி வைத்தார். உக்ரைனில் அரிய வகை கனிம வளங்கள் நிறைந்துள்ளன. ராணுவம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்புக்கு பயன்படும் லித்தியம், கிராபைட் உள்ளிட்ட கனிம வளங்கள் அங்கு அதிகமாக உள்ளன.
உலகின் மொத்த அரிய வகை கனிமங்களில் 5% அங்கு இருக்கும் நிலையில், அதனை பெற டிரம்ப் காய்நகர்த்தினார்.
இந்த கனிம வளங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக உக்ரைனுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வந்தார். கனிமங்கள் வர்த்தகத்தில், 50 சதவீத லாபத்தை அளிக்க வேண்டும் என்று டிரம்ப் உக்ரைனுக்கு நிபந்தனை விதித்தார். முதலில் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில், அதன்பிறகு டிரம்பின் அழுத்ததிற்கு ஜெலன்ஸ்கி பணிந்தார்.
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்காக உகரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்கா வந்திறங்கியதை செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்ததின் மூலம் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே வேளையில் பல்வேறு நிபந்தனைகள் விதித்தாலும் போரில் உக்ரைனுக்கு எந்த உதவியும் செய்வதாக அமெரிக்கா வாக்குறுதி அளிக்கவில்லை. எப்படியாவது போரை நிறுத்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட ஜெலன்ஸ்கி வேறு வழியின்றி கனிம வளங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட இறங்கிவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.