அரபு நாடுகளுக்கு பயந்து காசா விஷயத்தில் திடீர் பல்டி அடித்த டொனால்ட் டிரம்ப்!!

Published : Feb 23, 2025, 08:12 PM IST
அரபு நாடுகளுக்கு பயந்து காசா விஷயத்தில் திடீர் பல்டி அடித்த டொனால்ட் டிரம்ப்!!

சுருக்கம்

டிரம்ப் காசா திட்டத்தை ஒரு பரிந்துரையாக மட்டுமே கருதுவதாகவும், இஸ்ரேல் ஏன் காசாவை விட்டுக் கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காசா பகுதியை இஸ்ரேல் கைப்பற்ற வேண்டும் என்ற தனது முந்தைய கருத்துக்கு உலக அளவில், குறிப்பாக அரபு நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது திட்டம் ஒரு 'பரிந்துரை' மட்டுமே என்றும் 'வற்புறுத்தல்' இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதை செய்தியாக ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ளது.


ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய டிரம்ப், மத்திய கிழக்கு பிரச்சனையை தீர்க்க தனது திட்டம் தான் "சிறந்த அணுகுமுறை" என்று மீண்டும் வலியுறுத்தினார். "நான் உங்களுக்குச் சொல்கிறேன், எனது திட்டம் தான் சரியான வழி. அதுதான் உண்மையில் பயன் அளிக்கும் திட்டம் என்று நான் நினைக்கிறேன்," என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.


அமெரிக்க அதிபர் மேலும் கூறுகையில், "ஆனால் நான் அதை வற்புறுத்தவில்லை. நான் அதை பரிந்துரைக்கப் போகிறேன். அதன் பிறகு அந்த இடம் அமெரிக்காவுக்கு சொந்தமாகிவிடும். ஹமாஸ் இருக்க மாட்டார்கள். அவை மேம்படுத்தப்பட்டு, ஒரு சுத்தமான தொடக்கத்துடன் நீங்கள் மீண்டும் ஆரம்பிக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.


காசாவிலிருந்து வரும் பாலஸ்தீனிய அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துள்ள ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளை டிரம்ப் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் என்று ஜெருசலேம் போஸ்ட் செய்தி கூறுகிறது. மேலும், அமெரிக்கா இந்த நாடுகளுக்கு வழங்கும் கணிசமான உதவியை சுட்டிக்காட்டி டிரம்ப் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார் என்று அந்த செய்தி குறிப்பிடுகிறது. இருப்பினும், காசா விஷயத்தில் ஜோர்டானைத் தவிர மற்ற அரபு நாடுகள் இந்த திட்டத்தை பெரும்பாலும் நிராகரித்துள்ளன. ஜோர்டான் 2,000 உடல்நலம் சரியில்லாத குழந்தைகளை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது. 

சுமார் இரண்டு மில்லியன் காசா மக்கள் அங்கேயே இருக்கும் வகையில் ஒரு மாற்றுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்க அரபு நாடுகளின் குழு ஒன்று கூடியது என்று ஜெருசலேம் போஸ்ட் செய்தி கூறுகிறது. தனது திட்டத்தை தான் வலியுறுத்த மாட்டேன் என்று டிரம்ப் தெரிவித்தாலும், அதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். "அது இப்போது கிட்டத்தட்ட தரைமட்டமாக்கப்பட்டுள்ளது, குப்பைகளை அகற்றுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை," என்று காசாவைப் பற்றி தனது நேர்காணலில் டிரம்ப் கூறினார்.


"அந்த இடம் வாழத் தகுதியற்றது. அதைவிட ஒரு நல்ல சமூகத்தில் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் எங்கு போவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று டிரம்ப் கூறியதாக அந்த செய்தி மேற்கோள் காட்டியுள்ளது.
காசாவிலிருந்து இஸ்ரேல் 2005- ல் தன்னிச்சையாக வெளியேறியது. குடியிருப்புகளை அகற்றி, ராணுவத்தை நீக்கி, பாலஸ்தீனிய அதிகாரத்திற்கு கட்டுப்பாட்டை மாற்றியது பற்றி டிரம்ப் நினைவு கூர்ந்தார் என்று ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்! 15 மாத சண்டை முடிவுக்கு வருகிறது!
அமெரிக்க அதிபர் ஏன் இஸ்ரேல் அந்த முடிவை எடுத்தது என்று கேள்வி எழுப்பினார். "அது ஒரு சிறந்த இடம். இஸ்ரேல் ஏன் அதை விட்டுக் கொடுத்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் அவர்கள் அதை விட்டுக் கொடுத்தார்கள்?" என்று டிரம்ப் தனது நேர்காணலில் கேள்வி எழுப்பியுள்ளார். 


முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோனைப் பற்றி குறிப்பிட்டபோது, டிரம்ப் அவரை நேரடியாகக் குறிப்பிடாமல், "இஸ்ரேலைச் சேர்ந்த ஒருவர், யார் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் நன்கு அறியப்பட்டவர், அதை விட்டுவிட முடிவு செய்தார். அது ஒரு மோசமான ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களில் ஒன்று." என்று கருத்து தெரிவித்தார். மேலும், நெதன்யாகு மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா அல்லது ஹமாஸை ஒழிக்க வேண்டுமா என்று கேட்டதற்கு, எந்த முடிவையும் தான் ஏற்றுக்கொள்வதாக டிரம்ப் பதிலளித்தார் என்று ஜெருசலேம் போஸ்ட் செய்தி தெரிவித்துள்ளது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
மோடி அழுத்தத்திற்கு அடிபணியும் தலைவர் அல்ல, இந்தியா வளர்ந்து வரும் சக்தி - புதின் புகழாரம்