
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற Donald Trump, அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். அப்போது, ஒபாமாவின் ஆலோசனைகளை தாம் எதிர்பார்ப்பதாகவும், தமக்கு இவை பேருதவியாக இருக்கும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Donald Trump-க்கு அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என்று ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து வெள்ளை மாளிகைக்கு சென்ற Donald Trump-ஐ அதிபர் ஒபாமா வரவேற்று பேசினார். இந்த சந்திப்பின் போது, இருவரும் பரஸ்பரம் தங்களது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பேசிய அதிபர் ஒபாமா, ட்ரம்பின் வெற்றியை அமெரிக்காவின் வெற்றி என தாம் பார்ப்பதாக கூறினார். மக்களின் நலனுக்காக அனைத்து பணிகளையும் தம்மால் முடிந்தவரை பொறுப்புடன் செய்து முடித்திருப்பதாகவும், இதனை அமெரிக்க மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய Donald Trump, அதிபர் ஒபாமாவின் ஆலோசனைகளை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், ஆட்சிக்காலத்தின் போது தமக்கு அது பேருதவியாக இருக்கும் என்றும் கூறினார். ஒபாமாவுக்கும், தமக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல் மிக சிறப்பானது என்றும், அவரை சந்தித்தது தமக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் என்றும் Donald Trump தெரிவித்தார்.