
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். முன்னதாக சீனா சென்ற டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். ஆசிய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், தனது டுவிட்டர் பக்கத்தில் அது குறித்த செய்திகளை பதிவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், வடகொரிய அதிபர் கிம் ஜங்கிற்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. ஐ.நா. சபையில் டிரம்ப் பேசும்போது, வடகொரிய அதிபருக்கு முடிவு கட்ட ஏவுகணை சோதனை செய்து வருகிறார் என்று கூறியிருந்தார்.
டிரம்பின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கிம் ஜங், அமெரிக்காவின் தலைவர் ஒரு வயதான முதியவர் என்றும், குரைக்கும் நாய் கடிக்காது என்றும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனநலம் சரியில்லாதவர் என்றும் கிம் ஜங் விமர்சனம் செய்திருந்தார்.
வடகொரிய அதிபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அதில், வடகொரிய அதிபரின் செயல்பாடு மூலம் தன் நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இதுதான் அந்த நாட்டில் நடக்கப்போகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவரை சோதிப்போம் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப் இன்று கிம் ஜங்கை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னை முதியவர் என்று கிம் கூறினாலும், நான் ஒரு பொழுதும் அவரை குட்டையான மற்றும் குண்டான நபர் என்று கூறியதில்லை. ஆனால் அவர் இப்படி கூறி என் மனதினை புண்படுத்தியுள்ளார். அவருடன் நட்புறவு ஏற்பட முயற்சி செய்கிறேன். அது என்றாவது ஒருநாள் நடைபெறக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில்
பதிவிட்டுள்ளார்.