மோடியை சந்திக்கும் போது அறிவிப்புகள் வெளியாகலாம்... ட்ரம்ப் சூசகம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 20, 2019, 11:05 AM IST
Highlights

பிரதமர் மோடியை சந்தித்து பேசும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார். 

பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக வரும் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  இந்த சுற்றுப்பயனத்தின் போது டெக்சாஸின் ஹூஸ்டன் நகரில், இந்திய வம்சாவளியினர்  கலந்து கொள்ளும் 'ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில்  பேச இருக்கிறார்.   22- ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 50,000 -க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்திய-அமெரிக்கா இடையிலான வலிமையான நட்புறவை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பு அழைப்பளராக அதிபர் டிரம்ப்பும் பங்கேற்க இருக்கிறார். 

கடந்த ஜூன் மாதத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாடு, ஆகஸ்ட் மாதத்தில் பிரான்ஸில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டுக்குப் பிறகு இரண்டு தலைவர்களும் பங்கேற்றும் மூன்றாவது நிகழ்வாக இந்த சந்திப்பு அமைய உள்ளது. இதற்கிடையில்,  கலிபோர்னியாவிலிருந்து வாஷிங்டன் நகருக்குத் திரும்பும் வழியில் விமானப் படைத்தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கும்போது ஏதேனும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதா? என டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு  பதிலளித்த டிரம்ப்,  “அறிவிப்புகள் வெளியாகலாம். பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். அவருக்கும் எனக்கும் நல்ல நட்புறவு உள்ளது” எனத் தெரிவித்தார். 

click me!