இந்தியாவுடனான அனைத்து வணிக உறவுகளையும் பாகிஸ்தான் முறித்துக் கொண்டதையடுத்து அந்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் திணறி வருகின்றனர்.
காஷ்மீர் விவகாரத்தில் கடுமையான கோபமும், விரக்தியும் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வணிக ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டதையடுத்து அந்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது..
பாகிஸ்தானின் இந்த முடிவு அவர்களுக்கே மிகப்பெரிய அச்சத்தை உருவாகியுள்ளது. இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டனர். மேலும், பருவம் தவறி பெய்த மழை போன்ற காரணங்களாலும் உள்நாட்டில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய காரணங்களால் பாகிஸ்தானில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளியின் விலை 180 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த ஈரான் நாட்டில் இருந்து தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் தேசிய உணவு பாதுகாப்பு அமைச்சரவை செயலர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் நிதி ஆலோசகர் அப்துல் ஹபீஸ் ஷேக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' கராச்சியில் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது’ என கூறியதையடுத்து பாகிஸ்தான் சமூக வலைதளவாசிகள் அவரை டுவிட்டரில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.