
டிரம்ப்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் (Donald Trump vs Zelensky argument)
அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவமதிப்பு செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் டிரம்ப் இந்த சந்திப்பை கையாண்ட விதத்தை விமர்சித்துள்ளனர். டிரம்பும் வான்ஸும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஆதரவாக இருப்பதாக செனட் ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரஷ்யா (Russia)
ரஷ்ய அதிகாரிகள் ஜெலென்ஸ்கியை கேலி செய்துள்ளனர், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, ''டொனால்ட் டிரம்பும் வான்ஸும் ஜெலென்ஸ்கியை அடிக்காமல் விட்டது அதிசயம்'' என்று தெரிவித்தார்.
உக்ரைன் (Ukraine)
உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, "சரியானதை எதிர்த்து நிற்க துணிச்சலும் வலிமையும்" கொண்டதற்காக ஜெலென்ஸ்கியைப் பாராட்டினார். ஜெலென்ஸ்கி உக்ரைனுக்காகவும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான இலக்கிற்காகவும் நிற்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் (France)
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல், ''ஆரம்பத்திலிருந்தே போராடி வருபவர்களை நாம் மதிக்க வேண்டும். ரஷ்யா ஆக்கிரமிப்பாளர். உக்ரைனியர்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளான மக்கள். (Russia-Ukraine war) உக்ரைனுக்கு உதவவும், ரஷ்யாவை தடை செய்யவும் நாங்கள் தொடர்ந்து முன்நிற்போம்'' என்றார்.
ஸ்பெயின் (Spain)
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உக்ரைனுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''ஸ்பெயின் உக்ரைனுடன் நிற்கிறது. இந்த விஷயத்தில் ஸ்பெயின் அமைதியை விரும்புகிறது. இதனால்தான் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கான வழியைக் கண்டுபிடிக்க நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். உக்ரைன் ஜெர்மனியை மற்றும் ஐரோப்பாவை நம்பியிருக்கலாம்'' என்று கூறினார்.
ஜெர்மனி (Germany)
ஜெர்மனியின் புதிய பிரதமரான ஃபிரெட்ரிக் மெர்ஸும் ஜெலென்ஸ்கிக்கு தனது ஆதரவை உறுதியளித்தார், "இந்த பயங்கரமான போரில் ஆக்கிரமிப்பாளரையும் (ரஷ்யா), பாதிக்கப்பட்டவரையும் (உக்ரைன்) நாம் ஒருபோதும் குழப்பக்கூடாது" என்று தெரிவித்தார்.
இத்தாலி (Italy)
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, உக்ரைன் போரைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.
பிரிட்டன் (Britain)
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) உக்ரைனுக்கு தனது ஆதரவை எதிரொலித்தார். உக்ரைனுக்கான இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட நீடித்த அமைதிக்கான முன்னோக்கிச் செல்லும் பாதையைக் கண்டறிய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகக் அவர் கூறினார்.
ஹங்கேரி (Hungary)
ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், சமாதானத்திற்காக துணிச்சலாக நின்றதற்காக டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்தார். ''வலிமையான மனிதர்கள் சமாதானம் செய்கிறார்கள், பலவீனமான மனிதர்கள் போரை உருவாக்குகிறார்கள்" என்று அவர் வெளிப்படையாக பேசினார்.
பிற ஐரோப்பிய தலைவர்கள் (European leaders)
இதேபோல் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், நார்வே பிரதமர் ஜோனாஸ் கஹர் ஸ்டோர், ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன், லிதுவேனியன் அதிபர் கீதானாஸ் நௌசேடா, ஐரிஷ் வெளியுறவு அமைச்சர் சைமன் ஹாரிஸ், செக் குடியரசு பிரதமர் பெட்ர் ஃபியாலா ஆகியோரும் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் (European Union)
ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் ஜெலென்ஸ்கியிடம் 'நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை' என்று உறுதியளித்தனர்.
''வலிமையாக இருங்கள், தைரியமாக இருங்கள், அச்சமின்றி இருங்கள். ஒரு நீதியான மற்றும் நீடித்த அமைதிக்காக நாங்கள் உங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.