வயது முதிர்வு மற்றும் மயக்க மருந்து பரிசோதனையால் பல மணி நேரங்களுக்கு அவரால் கண் விழிக்க இயலாத சூழல் ஏற்படலாம். இந்நிலையில் தன்னுடைய அதிபர் அதிகாரங்களை துணை அதிபர் கமலா ஹாரீஸூக்கு ஜோ பைடன் மாற்றியுள்ளார்.
அமெரிக்க அதிபர் மயக்க மருந்து சிகிச்சைக்கு சென்றதால், அதிபர் அதிகாரங்கள் துணை அதிபர் கமலா ஹாரீஸூக்கு மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மிக அதிக வயதில் அதிபரானவர் ஜோ பைடன் (78). அவர் 2019-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே, அவருடைய உடல்நிலை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போதே முழு உடல் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டு தான் முழு உடற் தகுதியோடு இருப்பதை பைடன் நிரூபித்தார். என்றாலும் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே உடல்நிலை பற்றிய கேள்விகள் எழுப்பப்படுவது அமெரிக்காவில் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் பைடன் வழக்கமான உடல் பரிசோதனைக்காகக் வாஷிங்டன் புறநகரில் உள்ள மருத்துவமனைக்கு இன்று சென்றார். அங்கு வழக்கமான உடல் பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் பெருங்குடலில் புற்றுநோய் இருக்கிறதா என்பதையும்; சிறுகுடலில் ஏதாவது நோய் இருக்கிறதா என்பதையும் அறிய உதவும் கோலன்ஸ்கோப்பி பரிசோதனையும் செய்யப்பட உள்ளது. இந்தப் பரிசோதனையை மயக்க மருந்து கொடுத்துதான் செய்ய முடியும். எனவே, பைடனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
வயது முதிர்வு மற்றும் மயக்க மருந்து பரிசோதனையால் பல மணி நேரங்களுக்கு அவரால் கண் விழிக்க இயலாத சூழல் ஏற்படலாம். இந்நிலையில் தன்னுடைய அதிபர் அதிகாரங்களை துணை அதிபர் கமலா ஹாரீஸூக்கு ஜோ பைடன் மாற்றியுள்ளார். எனவே, பைடன் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை கமலா ஹாரீஸ்தான் அதிபர் பணியைக் கவனிக்க உள்ளார். அதாவது, தற்காலிக அதிபராக கமலா ஹாரீஸ் செயல்படுவார். அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக துணை அதிபராகப் பதவியேற்றவர் என்ற சிறப்பு கமலா ஹாரீஸூக்குக் கிடைத்தது. இதேபோல அமெரிக்காவில் பெண் ஒருவர் அதிபராகவும் இருந்ததில்லை. தற்காலிக அதிபராவதன் மூலம் கமலா ஹாரீஸ் அந்தச் சிறப்பையும் பெற உள்ளார்.
இதற்கு முன்பு இதே பரிசோதனையை 2002, 2007 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய அதிபர் ஜூனியர் புஸ்ஸும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.