நிலவில் நூற்றுக்கணக்கான குகைகள் இருக்காம்! விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்ய லொகேஷன் ரெடி!

By SG BalanFirst Published Jul 15, 2024, 11:45 PM IST
Highlights

"நிலவில் உள்ள குகைகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மர்மமாகவே உள்ளன. இறுதியாக அவற்றில் ஒன்றின் இருப்பை உறுதிசெய்ய முடிந்தது உற்சாகமாக இருக்கிறது" என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிலவில் 55 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் இருவரும் தரையிறங்கிய இடத்திற்கு அருகில் ஒரு குகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட இத்தாலிய விஞ்ஞானிகள் இதே போல நூற்றுக்கணக்கான குகைகள் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

நிலவில் இருக்கும் இந்த குகைகள் எதிர்காலத்தில் அங்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவின் அப்பல்லோ 11 விண்கலம் தரையைத் தொட்ட இடத்திலிருந்து 250 மைல் (400 கிலோமீட்டர்) தொலைவில் இந்தக் குகை இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

Latest Videos

இந்தக் குகை நிலவின் மேற்பரப்பில் கண்டறியப்பட்ட 200 க்கும் மேற்பட்ட பள்ளத்தாக்குகளில் மிகவும் ஆழமானதாகக் கருதப்படும்  அமைதிக் கடல் (Sea of Tranquility) என்ற பள்ளத்தாக்கில் இருக்கலாம் என்று ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லியோனார்டோ கேரர், லோரென்சோ புரூசோன் இருவரும் தெரிவித்துள்ளனர்.

"நிலவில் உள்ள குகைகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மர்மமாகவே உள்ளன. இறுதியாக அவற்றில் ஒன்றின் இருப்பை உறுதிசெய்ய முடிந்தது உற்சாகமாக இருக்கிறது" என்று அவர்கள் கூறுகின்றனர்.

நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரால் சேகரிக்கப்பட்ட ரேடார் தரவை பகுப்பாய்வு செய்து, இந்த ஆய்வைச் செய்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் அடங்கிய கட்டுரை நேச்சர் அஸ்ட்ரோனமி (Nature Astronomy) என்ற இதழில் வெளியாகியுள்ளது.

நாசாவின் ரேடார் தரவு குகையின் ஆரம்ப பகுதியை மட்டுமே காட்டுகிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவர்களின் மதிப்பீட்டின்படி, தெரியவந்துள்ள குகை குறைந்தது 130 அடி (40 மீட்டர்) அகலத்தில் பல்லாயிரக்கணக்கான மீட்டர் தூரம் செல்வதாக இருக்கலாம்.

சந்திரனின் தென் துருவத்திலும் இதேபோன்ற சில குகைகளைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்தக் குகைகள் வரும் ஆண்டுகளில் நாசாவின் விண்வெளி வீரர்கள் தரையிறங்குவதற்கான இடத்தைத் தீர்மானிக்க உதவலாம் என்றும் கூறுகின்றனர். நிலவில் நிரந்தரமாக வெயில் படாமல் இருக்கும் பள்ளத்தாக்குகளில் நீர் உறைந்த நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது. அது குடிநீர் ஆதாரமாகவும் உதவலாம் என்று கருதுகின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பு நிலவில் இதேபோல நூற்றுக்கணக்கான குகைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் குறிக்கிறது என்றும் சொல்லும் விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களுக்கு அவை தங்குமிடமாக பயன்படலாம். காஸ்மிக் கதிர்கள், சூரிய கதிர்வீச்சு மற்றும் மைக்ரோமீட்டோரைட் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும் அரணாகவும் இருக்கக்கூடும் என்று கணிக்கிறார்கள்.

நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் உள்பட 12 அமெரிக்க விண்வெளி வீரர்கள் நாசாவின் அப்பல்லோ திட்டத்தின் மூலம் 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நிலவில் இறங்கினர்.

click me!