கர்ப்பிணி பெண்ணைக் கடத்தி கொன்று அவரது வயிற்றில் இருந்த குழந்தையை திருடி வளர்த்து வந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
கர்ப்பிணி பெண்ணைக் கடத்தி கொன்று அவரது வயிற்றில் இருந்த குழந்தையை திருடி வளர்த்து வந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த கொடூர குற்றத்துக்காக அவர்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் வசித்து வந்தவர் சவான்னா கிரேவின்ட் (22). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் காணாமல் போயுள்ளார். இது குறித்து அப்பகுதி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. சவான்னாவின் கணவரும், அவரது உறவினர்களும் இந்த புகாரை கொடுத்திருந்தனர்.
காணாமல் போன நிலையில் சவான்னா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் டகொடா சுற்றுப்புறத்தில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு பெண்ணின் உடல் ஒதுங்கியது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போன சவான்னா கிரேவின்ட் உடல்தான் என்பது தெரியவந்தது. மேலும், உடற்கூராய்வு செய்தபோது, சவான்னாவின் வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால், வயிற்றில் இருந்த குழந்தையின் நிலை என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.
இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த புரூக் கிரவுஸ் மற்றும் அவரது காதலன் வில்லியம் கோயன் இருக்கும் வீட்டில் குழந்தை சத்தம் கேட்டுள்ளது. இதன் பிறகு, போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு விசாரித்ததில், அந்த தம்பதியினர் முன்னுக்குப்பின் முரணான பதில்களைக் கூறினர். சவான்னா கிரேவின்ட் குடும்பத்தனிர் குழந்தையின் முக ஜாடை உள்ளிட்டவற்றை வைத்து வலுவான சந்தேகத்தை போலீசார் எழுப்பினர்.
போலீசார் தொடர் விசாரணையில், சவான்னாவை கொன்று குழந்தையை திருடியது அம்பலமானது. இது குறித்து போலீசார் கூறும்போது, ல்லியம் வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த கயிறு ஒன்றை கைப்பற்றி டி.என்.ஏ. சோதனை மேற்கொண்டோம். அந்த கயிற்றை கொண்டு சவான்னா-வின் கழுத்தை வில்லியம் நெரித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம்.
வயிற்றைக் கிழித்து பெண்ணை படுகொலை செய்து குழந்தையை வெளியில் எடுத்து, அதனை சட்டத்துக்க புறம்பாக வளர்த்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து ஜாமினில் வெளிவராதபடி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் வயிற்றைக் கிழித்து கொன்று, குழந்தையை திருடிய இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.