எங்கே இருக்கிறார் கிம் ஜாங் உன்..? காட்டிக்கொடுத்த சேட்டிலைட் ஃபோட்டோ

By karthikeyan VFirst Published Apr 26, 2020, 5:41 PM IST
Highlights

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்த பல்வேறு தகவல்கள் உலாவரும் நிலையில், அவரது ரயில் செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றில் சிக்கியுள்ளது. 
 

வடகொரியாவை நிறுவிய கிம் சங். அவரது பேரன் கிம் ஜாங் உன். உலக நாடுகளுக்கும் பன்னாட்டு அமைப்பான ஐநா-விற்கும் கட்டுப்படாமல், யார் பேச்சையும் மதிக்காமல் சர்வாதிகரப்போக்குடன் நடந்துவந்தவர் கிம் ஜாங் உன். ஐநா தீர்மானத்தை மீறி தொடர் அணு ஆயுத சோதனைகள் நடத்தியதால் அந்த நாட்டின் மீது ஐநா பொதுச்சபை, பாதுகாப்பு சபை என இரண்டுமே தனித்தனியாக பொருளாதாரத்தடை விதித்துள்ளன. 

உலக நாடுகளிடமிருந்து விலகியே இருந்துவருகிறது வடகொரியா. தனித்தும் தன்னிச்சையாகவும் செயல்பட்டுவந்த வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் அண்மைக்காலமாக, கொரோனா பீதிக்கு மத்தியில், பெரும் பரபரப்பை கிளப்பிவருகின்றன. 

கடந்த 15ம் தேதி கிம் ஜாங் உன்னின் தாத்தாவும் வடகொரியாவை நிறுவியவருமான கிம் சங்கின் பிறந்தநாள். அந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளாத கிம் ஜாங் உன், கடந்த சில நாட்களாக எந்த விழாவிலும் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து வடகொரியாவை உன்னிப்பாக கவனித்துவரும் அமெரிக்காவின் ஊடகங்கள், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அண்மையில் செய்யப்பட்ட இதய அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததால், அவர் கோமாவில் இருப்பதாக தகவல் வெளியிட்டது. 

ஆனால் தென்கொரியா இந்த தகவலை மறுத்தது. அதிலிருந்து தொடர்ச்சியாக கிம் ஜாங் உன் குறித்த பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றனர். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது மருத்துவரின் கை நடுங்கியதால், கிம் ஜாங் உன் மூளைச்சாவு அடைந்ததாக ஜப்பான் ஊடகம் தெரிவித்துள்ளது. 

இப்படியாக கிம் ஜாங் உன் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பல உலாவரும் நிலையில், அவரது ட்ரெய்ன் ஒன்று வடகொரியாவின் உல்லாச நகரமான வான்சனில் நிற்கும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.

வடகொரியாவை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்துவரும் நிலையில், வாஷிங்டனில் இருந்து வடகொரியா கண்காணிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செயற்கைக்கோள் புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதில், கிம் ஜாங் உன்னின் ரயில் வான்சன் நகரத்தில் நிற்பது தெரியவந்துள்ளது. 

வான்சன் நகரில் தலைவர்களுக்கான ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ரயில் நிலையம் கிம் ஜாங் உன்னின் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தும் ரயில் நிலையம். அந்த ரயில் கிம் ஜாங் உன்னின் ரயிலாக இருக்கலாம். ஆனாலும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ரயில் வான்சனில் நிற்பதால், கிம் ஜாங் உன் அங்குதான் இருப்பார் என்பதற்கு அது ஆதாரமாக அமையாது என்றும் இதைவைத்து அவரது உடல்நலம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது எனவும் வாஷிங்டன் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. எனினும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள உல்லாச நகரமாக வான்சனில் தான் கிம் ஜாங் உன்  இருப்பதற்கான அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!