தங்களை எதிர்க்கும் நாடுகளுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் உள்ளது எனும் வகையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் அண்டை நாடான ரஷ்யா, அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால், இரு பக்கமும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை உக்ரைனில் பொதுமக்கள் 198 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு முன்பாக,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆற்றிய உரையில் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருபதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில்,ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது.இந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.இந்நிலையில், ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.
இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியடைந்தது.
போருக்கு முன் புதின் ஆற்றிய உரையில் ராணுவ விவகாரங்களை பொறுத்தவரையில், ''சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும், கணிசமான பகுதிகளை இழந்த பின்னரும், இன்றைய ரஷ்யா மிகவும் பலம்வாய்ந்த அணுசக்தி நாடுகளில் ஒன்றாகவே திகழ்கிறது.
எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டை(ரஷ்யாவை) தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் சந்திக்க நேரிடும்'' என்று அவர் கூறி உள்ளார். இந்நிலையில், அணு ஆயுதப் போரையே புடின் சுட்டிக்காட்டி இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.மேலும், உக்ரைனுக்கு எதிரான போரில் அந்த நாட்டிற்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்காவோ அல்லது பிற நாடுகளோ, தாக்குதல் தொடுத்தால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் உள்ளது என்கிற ரீதியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மிரட்டல் அமைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின் போது,ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி மீது அமெரிக்கா அணு ஆயுததாக்குதல் நடத்தியதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பல லட்சம் மக்கள் அணு கதிரின் விளைவால் இன்று வரையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.