மாதந்தோறும் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இனப்பெருக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்தும் அல்லது உடலில் கொரோனா வைரஸ் உற்பத்தியை சீர்குலைக்கும் தன்மை கொண்ட அவிஃபாவிர் தடுப்பு மருந்தை ரஷ்யா மருத்துவமனைகளுக்கு வழங்க உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலையடுத்து மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அவிஃபாவிர் என்ற மருந்து ரஷ்ய நாட்டில் பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
ரஷ்ய அரசின் 50 சதவீத முதலீடு உள்ள கெம்ரார் என்ற நிறுவனம் இந்த மருந்தை தயாரித்துள்ளது. உலகில் வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த தடுப்புமருந்தை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் நடந்து வரும் நிலையிலேயே, இந்த மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் கெம்ரார் குழுமம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தொகுதி அவிஃபாவிர் மருந்தை ரஷ்ய மருத்துவமனைகளுக்கு வழங்க உள்ளதாக, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாதந்தோறும் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் இதன் உற்பத்தி 2 மில்லியனாக அதிகரிக்கப்படும், ரஷ்யா முழுவதும் இந்த மருந்துக்கு அதிக தேவை உள்ளது, நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்ப முடிவுகள் மூலம் இந்த மருந்து உலகில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்று என ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார். அவிஃபாவிர் கொரோனா வைரஸ் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது அல்லது இனப்பெருக்க வழி முறைகளை முழுமையாக சீர்குலைக்கும் தன்மை கொண்டது என கிரில் ட்மிட்ரிவ் தெரிவித்துள்ளார்.