பற்றி எரியும் தீ... 500 பேர் வெளியேற்றம்... ரஷ்ய போர்க்கப்பலை துவம்சம் செய்த உக்ரைன்...!

By Kevin KaarkiFirst Published Apr 14, 2022, 11:13 AM IST
Highlights

கருங்கடலில் உள்ள ரஷ்ய போர்க் கப்பலை தாக்கி இருப்பதாக உக்ரைன் அறிவித்து இருந்தது. உக்ரைன் நடத்திய தாக்குதல் பற்றி ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ச்சியாக ஏழாவது வாரமாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷ்ய நாட்டு படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகளின் தீவிர தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளன. இந்த நிலையில், கருங்கடலில் உள்ள ரஷ்ய போர்க் கப்பலை தாக்கி இருப்பதாக உக்ரைன் அறிவித்து இருந்தது. தற்போது உக்ரைன் நடத்திய தாக்குதல் பற்றி ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

விளக்கம்:

உக்ரைன் தாக்கிய போர்க்கப்பல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த கப்பில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

முன்னதாக உக்ரைன் ஆளுநர் மக்சிம் மார்சசென்கோ கூறும் போது, "கருங்கடலைக் காக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷிய போர்க் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தான் உக்ரைனின் மகிமை. அந்த கப்பல் தற்போது பயங்கரமாக எரிந்து வருகிறது. அதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், அவர்களால் உதவி பெற முடியுமா என்பது தெரியவில்லை." என தெரிவித்தார். 

அமெரிக்கா உதவி: 

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை உக்ரைக்கு வழங்குவதாக அறிவித்து இருந்தார். இதில் ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. தற்போது வழங்கப்படும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் தனது தாக்குதலை மேலும் நீண்ட தூரத்திற்கு குறிவைக்க முடியும். 

மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாடு:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உக்ரைனில் இருந்து சுமார் 40 ஆயிரம் பேர் வெளியேறி இருக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் நாட்டை விட்டு சுமார் 46 லட்சம் பேர் வெளியேறி மற்ற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.  

"இங்கு மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை. எனினும், நான் இங்கு எனது வீட்டில் வாழவே விரும்புகிறேன். இங்கிருந்து வெளியேறினால், எங்கு செல்வது?" என அங்குள்ள பெண்மணி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

click me!