Russia Ukraine War: வெளிநாட்டு விமானங்களை ரஷ்யாவில் மறு பதிவு செய்யும் புதிய சட்டம் அந்நாட்டில் இயற்றப்பட்டு இருக்கிறது.
நேட்டோ அமைப்பில் இணைய முயற்சி செய்து வந்த உக்ரைன் நாட்டின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. கடந்த ஒன்றிரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் போரில் ரஷ்யா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு மாகாணங்களை ரஷ்யா ஆக்கிரமித்து விட்டது. மேலும் உக்ரைனில் ரஷ்ய படைகளை குவிப்பதோடு, ஆயுதங்களையும் குவித்து வருகிறது.
போரில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் கடுமையான நெருக்கடி சூழலில் சிக்கி தவிக்கின்றன. ரஷ்ய தலைநகர் கீவ் அருகில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் ஏற்கனவே சுற்றி வளைத்துவிட்டன. இதனிடையே போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து லீசுக்கு எடுக்கப்பட்ட விமானங்களை மறு பதிவு செய்ய அனுமதிக்கும் புதிய சட்டத்தை ரஷ்யா அந்நாட்டில் இயற்றி இருக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மேற்கத்திய நாடுகள் பிறப்பித்து இருக்கும் தடைகளில் இருந்து ரஷ்யா ஓரளவு தப்பிக்க முடியும்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டு இருக்கும் புதிய சட்டத்தின் நோக்கம் ரஷ்ய நாட்டின் உள்நாட்டு விமான சேவைக்கு ஆதரவு கொடுக்கவும், உள்நாட்டு விமான சேவை தடையின்றி செயல்பட வைப்பதே ஆகும்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதை அடுத்து மேற்கத்திய நாடுகள் பிறப்பித்து இருக்கும் தடைகளின் படி விமானங்களை லீசுக்கு கொடுத்த நாடுகள் அவற்றை மார்ச் 28 ஆம் தேதிக்குள் திரும்ப எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனிடையே ரஷ்யா அவசர அவசரமாக புதிய சட்டத்தை இயற்றி இருக்கிறது.
ரஷ்ய ஏர்லைன்ஸ் நிறுவனம் 780 ஜெட் விமானங்களை லீசுக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறது. இவற்றில் 515 ஜெட் விமானங்கள் வெளிநாடுகளுக்கு சொந்தமானவை ஆகும். ரஷ்யாவில் இயங்கி வரும் பெரும்பாலான ஜெட் விமானங்களில் பெர்முடா மற்றும் ஐயர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான விமானங்களே அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு நாடுகளை சேர்ந்த விமான துறை அதிகாரிகள் விமானங்களை செயல்பட அனுமதிக்கும் சான்றிதழ்களை ஏற்கனவே ரத்து செய்து விட்டனர். இந்த சான்றிதழ் இன்றி விமானங்கள் பறக்க முடியாது. ரஷ்யாவில் விமானங்களை மறு பதிவு செய்வதன் மூலம், இரு நாடுகள் மேற்கொண்ட சான்றிதழ் நீக்கும் நடவடிக்கையை செயலற்று போக செய்து விடும். இதனால் அவற்றை ரஷ்யாவினுள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும்.