அக்டோபருக்குள் கொரோனா தடுப்பூசி தயார்..! ரஷ்யா அதிரடி அறிவிப்பு

By karthikeyan V  |  First Published Jul 16, 2020, 10:16 PM IST

அக்டோபர் மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருந்து  தயாராகி மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. 
 


சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய வல்லரசு நாடுகளையே மிரட்டிவிட்டது. உலகளவில் இதுவரை 1.38 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் பெரும் தாக்கத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இல்லாததுதான் பெரும் பின்னடைவாக இருந்தது. உலக நாடுகளின் விஞ்ஞானிகள், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், ரஷ்யா கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதால், அக்டோபருக்குள் தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் இந்த ஆண்டு இறுதிக்குள் 3 கோடி தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. 

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் குறுகிய காலகட்டத்தில் முடிக்கப்பட்டாலும் அனைத்துக் கட்டச் சோதனைகளுக்கும் முழுமையாக உட்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

கொரோனா மருந்து கண்டுபிடிப்பிற்கான முதற்கட்ட சோதனையில், ரஷ்யா வெற்றி கண்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட சோதனை ஆகஸ்ட் 3ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்தநிலையில் மூன்றாம் கட்ட சோதனை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த சோதனையில், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருந்து பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சோதனையின் முடிவுகள், ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பரில் அங்கீகரிக்கப்படலாம் என்றும் ரஷ்யா நேரடி முதலீடு அமைபின் தலைவர் கிரில் திமித்ரீவ் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 3 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 17 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திமித்ரீவ் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!