ரஷ்யா பிரேசிலுக்கு SU-57 போர் விமானத்தை அனுப்ப உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் F-35 போர் விமானத்திற்கு போட்டியாக ரஷ்யா களம் இறங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆயுத கண்காட்சியில் ரஷ்யா தனது அதிநவீன ஆயுதங்களை காட்சிப்படுத்த உள்ளது.
சீனா, இந்தியாவைத் தொடர்ந்து பிரேசிலுக்கும் ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான SU-57 அனுப்ப உள்ளது. இதனால் அமெரிக்க போர் விமானமான F-35 ஐ உலக சந்தையில் இருந்து வெளியேற்ற ரஷ்யா முயற்சி செய்துவருகிறதா என்ற கேள்வி வலுத்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் LAAD 2025 என்ற பெயரில் ஆயுதக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக ரஷ்யா தனது அதிநவீன போர் விமானத்தை அனுப்பவிருக்கிறது. Su-57 ஐ தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட் (Rosoboronexport), ரியோவில்ந நடக்கும் ஆயுத கண்காட்சிக்கு Su-57 ஐ அனுப்பப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரேசிலில் நடைபெறும் ஆயுதக் கண்காட்சியில் பங்கேற்பதை நிறுத்தியிருந்த ரஷ்யா இப்போது சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளது.
ரோசோபோரோனெக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு நாட்டின் ராணுவத்திற்கும் தேவையான அதிநவீன ஆயுதங்களைத் தயாரிப்பதே நிறுவனத்தின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது. Su-57 ஸ்டெல்த் போர் விமானங்கள் மட்டுமல்லாமல், ரஷ்யா Mi-171Sh மற்றும் Ka-52E ஹெலிகாப்டர்கள் மற்றும் Su-57E மற்றும் Su-35 போர் விமானங்களையும் அனுப்பவுள்ளது.
இது தவிர, ரஷ்யா தனது டாங்க் சப்போர்ட் காம்பாட் வெஹிக்கிள் (BMPT) மற்றும் T-90MS டாங்கிகளையும் பிரேசிலுக்கு அனுப்பும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், ரஷ்யா தனது சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பான S-400 ஐ பிரேசிலுக்கு அனுப்ப உள்ளது. இந்தியா ஏற்கனவே ரஷ்யாவின் S-400 ரக ஏவுகணைகளை வாங்கியுள்ளது. ரஷ்யா SU-57 ரகசிய போர் விமானத்தை இந்தியாவிற்கு வழங்கவும் முன்வந்துள்ளது.
இதற்கு முன்பு, SU-57 போர் விமானம் நவம்பர் 2024 இல் ஜுஹாயில் நடந்த சீன விமான கண்காட்சியிலும், பெங்களூருவில் நடந்த ஏரோ இந்தியா 2025 விமான கண்காட்சியிலும் பங்கேற்றுள்ளது. ரஷ்ய நிறுவனம் இந்தியாவிலேயே Su-57 போர் விமானங்களை தயாரிக்க முன்வந்துள்ளது. இது தவிர, இந்தியா ரஷ்ய ஜெட் விமானங்களை வாங்க ஒப்புக்கொண்டால், இந்தியாவின் AMCA (Advanced Medium Combat Aircraft) ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பதில் உதவுவதாக ரஷ்யா கூறியுள்ளது.
இது தவிர, இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டாகப் போர் விமானத்தைத் தயாரித்தால், இந்தியாவும் அதை விற்கலாம் என்று தெரிவித்துள்ளது. ரஷ்யா பிரேசிலுக்கு அதிநவீன ஸ்டெல்த் போர் விமானங்களை விற்க முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் SU-57 போர் விமானம் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையே ஒரு முக்கியமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அல்ஜீரிய ஊடகங்கள் கூறியுள்ளன. இருப்பினும், இரு தரப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதை உறுதிப்படுத்தவில்லை.
பிரேசிலுக்கு அல்லது வேறு எந்த லத்தீன் அமெரிக்க நாட்டிற்கும் SU-57 போர் விமானங்களை விற்க விரும்புகிறதா இல்லையா என்பதை ரஷ்யா இன்னும் தெளிவாகக் கூறவில்லை. ஆனால் மாஸ்கோ அதிகாரிகள், ரஷ்யா Su-57 போர் விமானத்தின் கூட்டு உற்பத்திக்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.