1962 போரில் கூட நாங்கள் ஒருபோதும் ஆயுதங்கள் இல்லாமல் சீனாவுக்கு எதிராக சென்றதில்லை, நிராயுதபாணிகளாக செல்ல யார் உத்தரவு பிறப்பித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை
லடாக்கில் சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் எங்கள் ஜவான்களில் ஒருவரை கொன்றால் அவர்களில் ஐந்து ஜவான்களையும் நாம் கொல்ல வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார். இந்திய சீன எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பதற்றம் நீடித்து வந்த நிலையில், இருநாட்டு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்திய வீரர்களுக்கு எதிரான தாக்குதல் என்பது, காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு மீதான தாக்குதலாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல் பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரேந்திர சிங் வரை பல தலைவர்கள் எல்லையில் உள்ள வீரர்கள் ஏன் ஆயுதமின்றி நிராயுதபாணிகளாக சீனர்களுடன்பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டனர் என கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால், பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர். அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிழப்பாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரேந்திர சிங், லடாக்கில் சீனாவின் மோசடிக்கு இந்தியா தகுந்த பதிலளிக்க வேண்டும், அவர்கள் எங்கள் ஜவான்களின் ஒருவரை கொன்றால் அவர்களில் ஐந்து ஜவான்களை நாம் கொள்ள வேண்டும், அப்போதுதான் சீனா ஒரு பாடம் கற்கும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் 1962 போரில் கூட நாங்கள் ஒருபோதும் ஆயுதங்கள் இல்லாமல் சீனாவுக்கு எதிராக சென்றதில்லை, நிராயுதபாணிகளாக செல்ல யார் உத்தரவு பிறப்பித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை, மொத்தத்தில் வீரர்கள் எப்போதும் ஆயுதங்களுடன் செல்ல வேண்டும், இருபடைகளுக்கும் இடையில் உரையாடல் நடந்தாலும் அல்லது பொது ரோந்து சென்றாலும், அவர்கள் ஆயுதம் ஏந்தி இருக்க வேண்டும். வடக்கில் நடந்த சம்பவம் சீன துருப்புகள் முழுமையான தயாரிப்போடு வந்தது என்பதை நிரூபித்துள்ளது. அவர்களின் நோக்கம் பேச்சு வார்த்தை அல்ல. இந்திய வீரர்களுக்கு, சீனாவின் மோசடி மற்றும் கோழைத்தனம் பற்றி எதுவும் தெரியாது. வீரர்கள் ஏன் நிராயுதபாணியாக அங்கு அனுப்பப்பட்டனர் என்று யாராவது பதிலளிக்க வேண்டும், நாம் இப்போது கற்கால சகாப்தத்தில் அல்ல அணு யுகத்தில் வாழ்கிறோம் என கூறியுள்ளார். எல்லை விவகாரத்தில் பிரதமருடனான அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ராணுவ வீரர்கள் ஆயுதம் இன்றி சென்ற விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என கூறப்படுகிறது.