
Modi Meets Xi jinping After 7 Years! இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக சந்தித்து பேசியுள்ளார். சீனாவின் டியான்ஜின் நகரத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டின் கலந்து கொள்ள சீனா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று சீன அதிபர் சி ஜின்பிங்கை தனியாக சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பு
இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சீன வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது இந்தியா-சீனா உறவை மேம்படுத்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மனிதகுல முன்னேற்றத்திற்கு இந்தியா-சீனா உறவு அவசியம். எல்லைப் பிரச்சினையில் அமைதியான சூழல் நிலவுவதாகவும் மோடி கூறினார்.
இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை
இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கும். 280 கோடி மக்களின் நலனுக்காக உறவு மேம்பட வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டத்தாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக சீனாவின் தியான்ஜினில் தரையிறங்கிய உடனேயே பிரதமர் மோடி சமூக ஊடகங்களில், "சீனாவின் தியான்ஜினில் தரையிறங்கினேன். SCO உச்சி மாநாட்டில் கலந்துரையாடல்களையும் பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பதையும் எதிர்நோக்குகிறேன்" என்று பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
புதினையும் சந்திக்கும் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு தியான்ஜினில் உள்ள மெய்ஜியாங் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இன்று மாலை தொடங்குகிறது. வரவேற்பு விழா மற்றும் புகைப்பட அமர்வுக்குப் பிறகு, தலைவர்கள் ஒரு வரவேற்பு மற்றும் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
ஒன்று சேரும் தலைவர்கள்; டிரம்ப் புலம்பல்
அமெரிக்காவின் 50 சதவீத வரிகள் அமலுக்கு வந்த பிறகு, இந்தியாவிற்கு SCO உச்சி மாநாடு மிகவும் முக்கியமானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது பிரதமர் மோடி, ஜின்பிங் மற்றும் புதின் என 3 பேருக்கும் பிரதான எதிரியாக உள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் அதிக வரிகளை விதித்துள்ளார். இந்தியாவின் எதிரியாக இருந்த சீனா இப்போது இந்தியாவின் நண்பனாகி விட்டது, இந்தியா, ரஷ்யா இடையேயான உறவு மேலும் வலுப்படுவது டிரம்பை புலம்ப வைத்துள்ளது.