பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பேக்ஸ்லோவிட் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பேக்ஸ்லோவிட் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்னும் நிலையில் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கியது. அந்த தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் தடுப்பூசிகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் 110 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாட்களுக்குள் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், அந்த ஆபத்து 88% குறைந்துவிடும் என, பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. இந்த பரிசோதனைக்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 2,246 பேருக்கு, இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் 0.7% பேர் மட்டுமே 28 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இந்த மாத்திரை நல்ல செயல்திறனுடன் இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுக்குறித்து பேசிய பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பூர்லா, இந்த மாத்திரை அங்கீகரிக்கப்பட்டால், உயிர்களைக் காப்பாற்றவும், மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகளை வெளியேற்றவும் உதவும் ஆற்றல் உள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரில், வாய்வழி வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை கோடிட்டுக்காட்டுகிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தரப்பில் கூறுகையில், பேக்ஸ்லோவிட் மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கோ அல்லது நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கோ கொடுக்கலாம். அதில் வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளவர்களும் அடங்குவர். இந்த மாத்திரையை கொடுப்பதற்கு தகுதியான குழந்தைகள் குறைந்தபட்சம் 40 கிலோ எடையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்ட ஐந்து நாட்களுக்குள் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 88 சதவீதம் குறைந்துவிடும். வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த மாத்திரையின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு எப்.டி.ஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கடந்த மாதம் விண்ணப்பித்து இருந்தது. இந்நிலையில் பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பேக்ஸ்லோவிட் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.