சவுதிஅரேபியாவில் உள்ள ஆரோம்கோ நிறுவன எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
சவுதி அரேபியாவில் உள்ள அரோம்கோ நிறுவத்தின் அப்கய்க் மற்றும் குராயிஸ் எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் கச்சா எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. எண்ணெய் கிடங்குகள் தீபிடித்து எரிந்ததால் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலால் அந்த ஆலையில் 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்து மீண்டும் முழு அளவிலான உற்பத்தி தொடர சில வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல் நடந்து உற்பத்தி பாதிக்கப்பட்டதன் எதிரொலி இன்று காலையில் சர்வதேச சந்தையில் எதிரொலித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்து 5.61 டாலர் அளவுக்கு உயர்ந்து, 60.46 டாலராக அதிகரித்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் 11.77 சதவீதம் விலை உயர்ந்து 67.31 டாலராக அதிகரித்தது. இனிவரும் காலங்களிலும் இந்தவிலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது
இதனால் அச்சமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்கள் கையிருப்பில் இருக்கும் பெட்ரோலிய கச்சா எண்ணெயை பயன்படுத்த அனுமதியளித்துள்ளார். இந்த உற்பத்தி பாதிப்பு இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்து 330 புள்ளிகள் குறைந்தது.
இந்த உற்பத்தி பாதிப்பால் இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படும் கச்சா எண்ணெக்கு பாதிப்பு ஏற்படுமா என அஞ்சப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கு எந்தவிதமான தடையில்லாமல் கச்சா எண்ணெய் வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு மத்திய அரசிடம் உறுதியளித்தது
ஆனால் வரும் நாட்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லி்ட்டருக்கு ரூ.5 முதல் 6 ரூபாய் வரை உயரக்கூடும் என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கோடாக் இன்ஸ்டியூஷனல் ஈக்யுட்டிஸ் நிறுவனம் கூறுகையில் “ சவுதிஅரேபியா எண்ணெய் ஆலையில் நடந்த தாக்குதலின் விளைவு நிச்சயம் இந்தியாவில் எதிரொலிக்கும் வரும் நாட்களில் கச்சா எண்ெணய் விலை உயர்வைப்பொருத்து பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயரக்கூடும்” எனத் தெரிவித்துள்ளது
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் கூறுகையில், “ கச்சா எண்ணெய் விலை இப்போதுள்ள விலையில் நின்றுவிட்டாலே, சில்லரைவிலையில் பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் உயரக்கூடும்” எனத் தெரிவித்தது
ெஹச்பிசிஎல் நிறுவனத்தின் தலைவர் சுரானா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்ந்துவிட்டது, தொடர்ந்து உயர்ந்தால், சில்லரை விலையில் கடுமையாக எதிரொலிக்கும். கடந்த 15 நாட்கள் அடிப்படையில்தான் விலைநிர்ணயம் இருக்கும் என்பதால், வரும் நாட்களில் தெரியும்” எனத் தெரிவித்தார்