எப்படியும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் மனதில் இருந்தது. வேறு எந்த சித்னையும் எழவே இல்லை.
.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஒற்றை என்ஜின் கொண்ட விமானத்தை ஓட்டி வந்த விமானி திடீரென சுய நினைவை இழந்தார். இதை அடுத்து விபத்தில் சிக்க இருந்த விமானத்தை பயணி ஒருவர் பத்திரமாக தரையிறக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
பகாமஸ்-இல் இருந்து திரும்பி கொண்டிருந்த விமானத்தில் மற்றொரு பயணியுடன் 39 வயதான டேரன் ஹேரிசன் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, அதனை ஓட்டி வந்த விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனது உடல்நிலை மிக மோசமாகி விட்டதாக பயணிகளிடம் விமானி தெரிவித்தார். விமானி உடல் நிலை மோசம் அடைந்ததை அடுத்து என்ன செய்ய வேண்டும் என டேரன் ஹேரிசன் விமானியிடம் கேட்டார்.
சாமர்த்திய செயல்பாடு:
எனினும், பதில் அளிக்கும் முன் விமானி தனது சுய நினைவை இழந்து விட்டார். இதை அடுத்து ஹேரிசன் உடன் பயணம் செய்த மற்றொரு பயணி விமானத்தின் லீவரை கெட்டியாக பிடித்துக் கொள்ள விமானியை காக்பிட் பகுதியில் இருந்து வெளியே தூக்கிச் சென்றார் டேரன் ஹேரிசன். பின் விரைந்து வந்த டேரன் ஹேரிசன் விமான நிலையத்தை ரேடியோ மூலம் தொடர்பு கொண்டு அவசர நிலையை விளக்கினார்.
மறுமுனையில் பேசிய விமான போக்கவரத்து அதிகாரியும், விமான பயிற்சியாளர் ஹேரிசனுக்கு விமானத்தை தரையிறக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பொறுமையாக விளக்கினார். அவசர சூழலில் சற்றும் மனம் தளராத டேரன் ஹேரிசன் விமான போக்குவரத்து அதிகாரி கூறியதை மிகச் சரியாக பின்பற்றி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
அனுபவம்:
ஏற்கனவே விமானம் ஓட்டிய அனுபவம் துளியும் இல்லாத டேரன் ஹேரிசன், எப்படி விமானத்தை தரையிறக்கினார் என்ற அனுபவத்தை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். விமான உடல்நிலை மோசமடைந்ததும், விமானம் திடீரென கீழே விழத் தொடங்கியது. பின் விரைந்து செயல்பட தொடங்கினேன். உடன் பயணித்த பயணி ஒருவர் விமானத்தை கட்டுப்படுத்த உதவியாக இருந்தார்.
எப்படியும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் மனதில் இருந்தது. வேறு எந்த சித்னையும் எழவே இல்லை. அடுத்து என்ன செய்தால் விமானத்தை தரையிறக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முற்பட்டேன். விமானத்தில் இருந்த ஹெட்செட் மூலம் விமான போக்குவரத்து அதிகாரியும், விமானி பயிற்சியாளர் தான் என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை அப்படியே செய்தேன்.
விமானம் தரையிறங்கிய பின் தான் மனம் அமைதி கொள்ள ஆரம்பித்தது. பத்திரமாக தரையிறங்கிய பின் முதலில் என் மனைவிக்கு போன் செய்து பேசினேன். அவர் ஏழு மாதம் கற்பமாக இருக்கிறார். அவசர நிலையில், போன் செய்து அவரை பயமுறுத்த நினைக்கவில்லை. அப்போது எப்படியேனும் தப்பித்து விட வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தேன் என டேரன் ஹேரிசன் தெரிவித்தார்.