
போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, எல்லை தாண்டி இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் எனக் கூறி, இந்திய துணைத்தூதர் ஜே.பி.சிங்கை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு நேற்று கண்டனம் தெரிவித்தது.
கடந்த 2 வாரங்களில் எல்லைதாண்டி தாக்குதல் நடத்துகிறோம் என்ற விவகாரத்தில், 5-வது முறையாக இந்திய தூததரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
சர்வதேச எல்லைப்பகுதியான பாகிஸ்தானின் நிகைல் மற்றும் ஜான்ட்ரோட் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்றுமுன்தினம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.ஒரு பெண், 5 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் துணைத்தூதர் ஜே.பி.சிங்கை நேற்று நேரில் அழைத்து தெற்கு ஆசியா மற்றும் சார்க் அமைப்பின் இயக்குநர் முகம்மது பைசல் கடும் கண்டனம் தெரிவித்தார். எல்லையில் அத்துமீறி ராணுவம் நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இந்தியத் தூதரிடம் அப்போது அவர் வலியுறுத்தினார்.
2003-ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை புரிந்துகொண்டு மதிப்பு கொடுக்க வேண்டும். தொடர்ந்து நடந்து வரும் அத்துமீறல் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து, இந்திய வீரர்கள் எல்லைப்பகுதி கிராமங்களில் அமைதி நிலவ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்திய தூதரிடம் வலியுறுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டது.
எல்லை மீறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக இந்தியத் தூதரை கடந்த மாதம் 25, 26, 28 மற்றும் இம்மாதம் முதல் தேதி ஆகிய 4 முறை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.