இம்ரான்கான் 2 நாட்களில் பதவி விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக போராடி வரும் எதிர்க்கட்சிகள் கெடு விதித்துள்ளன.
பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமரான பின்னர் அவரது தலைமையிலான ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தவறான அரசுமுறை நிர்வாகம் ஆகியவற்றால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகி வருவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் மோசடி செய்து இம்ரான் கானின் கட்சி ஆட்சியை கைப்பற்றி விட்டதாகவும் அந்நாட்டின் பிரபல மதத்தைலைவரான ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் பஸ்ல் இயக்கத்தின் தலைவரான மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
பாகிஸ்தானை இம்ரான் கான் ஆட்சியின் பிடியில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி சிந்து மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி மாபெரும் பேரணி ஒன்றை மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தொடங்கினார்.
சுக்குர், முல்தான், குஜ்ரன்வாலா ஆகிய பகுதிகளின் வழியாக கடந்துவந்த 'ஆஸாதி’ எனப்படும் இந்த விடுதலை பேரணிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துன.
சிந்து மாகாணத்தில் தொடங்கிய பேரணி, நேற்று பிற்பகல் இஸ்லமாபாத் வந்தது. இஸ்லமாபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ரெஹ்மான், இந்த நாட்டை ஆள்வதற்கு மக்களுக்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும் வேறு எந்த அமைப்புக்கும் இல்லை என்று ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து, தனது இல்லத்தில் பல்வேறு கட்சிகள் அடங்கிய கூட்டத்தை கூட்டினார். போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியைச்சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய ரெஹ்மான், “இம்ரான் கான் ஆட்சியை விட்டு விலக வேண்டும். நாங்கள் அவருக்கு (இம்ரான் கான்) இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் இம்ரான் கான் பதவி விலகாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்போம்” என்றார்.