பனாமா முறைகேடு வழக்கு….பிரதமர் பதவியில் இருந்தது  நவாஸ் ஷெரிப்பை அதிரடியாக நீக்கியது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்…

 
Published : Jul 28, 2017, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
பனாமா முறைகேடு வழக்கு….பிரதமர் பதவியில் இருந்தது  நவாஸ் ஷெரிப்பை அதிரடியாக நீக்கியது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்…

சுருக்கம்

pakistan prime minister nawaz sheriff dismissed by supreme court

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரின் குடும்பத்தினர் வௌிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது உறுதியானதையடுத்து, அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உலகளவில் இருக்கும் அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.கள், தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிவைக்க பனாமா நாட்டைச் சேர்ந்த ‘மொசாக் பொன்சேகா’ என்ற சட்ட நிறுவனம் உதவியது. இது குறித்த ரகசிய ஆவணங்கள் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் வௌியாகி உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, ஓர் ஆண்டுக்கும் மேலாக, தீவிரப் புலனாய்வு செய்து, 2 கோடி எண்ணிக்கையிலான ஆவணங்களை கடந்த ஆண்டு வெளியிட்டது.  இதில், மொசாக் பொன்சேகா நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களும், தனிநபர்களும் சட்டவிரோதமாக பல்வேறு நாடுகளில் சொத்து சேர்க்க, பணத்தை பதுக்கி வைக்க உதவியிருப்பது அம்பலமானது.

இந்த பனாமா பேப்பர்ஸ் ஆவணத்தில்  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரின் குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்று இருந்தன. இதில், 1990களில் பிரதமர் பதவியை இருமுறை வகித்த போது,  நவாஸ் ஷெரீப்  தனது பதவிக் காலத்தில் ஊழல் செய்து லண்டனில் கோடிக் கணக்கில் அடுக்கு மாடி வீடுகளும், சொத்துகளும் வாங்கி குவித்துள்ளார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து, எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, அவாமி முஸ்லிம் லீக், ஜமாத் இ இஸ்லாமி ஆகிய கட்சிகள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குத் தொடர்ந்தனர்.

இதையடுத்து நவம்பர் மாதம் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக் குழு(ஜே.ஐ.டி.) அமைத்து, விசாரணை நடத்த கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இந்த கூட்டு புலனாய்வு குழு நவாஸ் ஷெரீப், அவரின் மகள், மகன், குடும்பத்தாரிடம் பல கட்ட விசாரணைகள் நடத்தி, தன்னுடைய அறிக்கையை கடந்த 10-ந்தேதி தாக்கல் செய்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், கடந்த 21-ந்தேதி தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், நீதிபதி இஜாஸ் அப்சல் கான் தலைமையில் நீதிபதிகள் ஆசிப் சயத் கோசா, கான், குல்சர் அகமது, ஷேக் அஸ்மத் சயீத் மற்றும் இஜாசுல் அசன் ஆகியோர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்தாவது-

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரின் மகள் மரியம், மகன்கள் ஹூசைன், ஹசன் ஆகியோர் ஊழல் செய்து, லண்டனில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பது உறுதியாகியுள்ளது. இதை கூட்டு புலனாய்வுக் குழு அளித்த அறிக்கையும் உறுதி செய்துள்ளது. ஆதலால், பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் உடனடியாக விலக  உத்தரவிடுகிறோம். அவர் நாடாளுமன்றத்துக்கு நேர்மை இல்லாதவர், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்ற அவர் தகுதியற்றவர்.

மேலும், நிதி அமைச்சர் இஷாக் தார், எம்.என்.ஏ. அவையின் உறுப்பினர் கேப்டன் சப்தார் ஆகியோரும் பதவி நீக்கம் செய்யப்படுகின்றனர். நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கை வௌியிட வேண்டும்.

தேசிய நம்பகத்தன்மை நீதிமன்றம், நவாஸ் ஷெரீப், அவரின் மகன்கள் ஹூசைன், ஹசன் மற்றும் மகள் மரியம் ஆகியோர் மீதும் விசாரணை நடத்த வேண்டும். அடுத்த 6 வாரங்களுக்கள் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தீர்ப்பளித்தனர்.

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!