
ஒக்லாஹோமாவின் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். திடீர் துப்பாக்கி சூடு காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் காயமுற்றனர்.
ஒக்லோஹமாவை அடுத்த துல்சாவில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் தாப்ட் எனும் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். வழக்கமாக கூட்டம் குறைவாக இருக்கும் நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் மட்டும் பலர் கலந்து கொண்டு இருந்தனர். இதில் மஸ்கோகி கவுண்டி ஷெரிப் அலுவலகத்தை சேர்ந்த உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திடீர் துப்பாக்கி சூடு:
நிகழ்ச்சியின் நடுவே பயங்கர துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ந்து போயினர். மேலும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அனைவரும் பதற்றத்துடன் ஓடிச் சென்று மறைந்து கொள்ள முற்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் 39 வயதான பெண் கொல்லப்பட்ட நிலையில், ஏழு பேர் பலத்த காயமுற்றனர். எனினும், காயமுற்றவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்து உள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஸ்கோகி கவுண்டி ஷெரிப் உறுப்பினர்கள் உதவி செய்தனர். துப்பாக்கி சூடு நடத்திய ஸ்கைலர் பக்னர் என்ற நபர் நேற்று மதியம் மஸ்கோகி கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
அனுபவம்:
“இல்லா இடங்களிலும் துப்பாக்கி தோட்டாக்கள் பறந்தன. நானும் டிபானி வால்டனும் ஃபுட் டிரக் கீழே சென்று மறைந்து கொண்டோம். ஆனால், அங்கேயும் தோட்டாக்கள் வந்தன. அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எதுவும் ஆகவில்லை. கடவுளுக்கு நன்றி. மக்கள் கத்தினர். சிலர் அங்கு இருந்து தப்பி ஓட முயற்சித்தனர். கார்கள் அங்கு இருந்து கிளம்பி சென்றன,” என்று துப்பாக்கி சூடு நடந்த இடத்தின் அருகில் ஃபுட் டிரக் ஒன்றில் பணியாற்றிக் கொண்டு இருந்த ஜெஸ்மேன் ஹில் தெரிவித்தார்.