இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி... புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு!!

By Narendran S  |  First Published May 20, 2022, 3:35 PM IST

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில் மேலும் 9 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுள்ளனர். 


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில் மேலும் 9 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை அடுத்து அங்கு மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால், ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. கோத்தபயாவும், மகிந்தாவும் பதவி விலகி, அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. நெருக்கடி முற்றியதால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்தாவை ராஜினாமா செய்ய கோத்தபய வலியுறுத்தினார். கடந்த 6 ஆம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை கடந்த 9 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி காலேவில் போராட்டம் நீடித்து வருகிறது. இதனிடையே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதமரானார்.

Tap to resize

Latest Videos

ரணில் தலைமையில் அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தில் ஏற்கனவே 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்த நிலையில் இன்று மேலும் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி கோத்தபயா மாளிகையில் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அனைவரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, துறைமுகங்கள் கப்பல்கள், விமான சேவைத்துறை அமைச்சராக நிமல் சிறிபால டிசில்வா பதவியேற்றுள்ளார். கல்வித்துறை அமைச்சராக சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல-வும் பதவியேற்றுக்கொண்டனர். விஜேதாச ராஜபக்சே நீதித்துறை அமைச்சராகவும், ஹரீன் பெர்ணாண்டோ சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ரமேஷ் பத்திரண பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும், நளின் பெனாண்டோ வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அளஸ்  பொறுப்பேற்றுக் கொண்டார். 

சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெனாண்டோவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னதாக ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகாரம் அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சராகவும் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் கஞ்சன விஜேசேகர மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராகவும் பதவியேற்று இருந்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் 9 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அமைச்சர்களுக்கான ஊதியம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கான சிறப்பு சலுகைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் மதிய உணவு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

click me!