
‘இஸ்ரேல்-பாலஸ்தீனனம் இடையே தீர்வு காண இந்தியா உதவும்...பிரதமர் மோடி உறுதி...
சுதந்திரமான ஒருங்கிணைந்த பாலஸ்தீன் அமைவதற்கும், இஸ்ரேலுடனான பிரச்னைக்கு சுமுக தீர்வு காணவும் பாலஸ்தீனுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
இஸ்ரேல் பயணம்
பாலஸ்தீன அதிபர் மகமூது அப்பாஸ் 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அப்பாசும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. வரும் ஜூலையில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார். அப்போது, இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னை குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று தெரிகிறது.
இந்தியா நம்பிக்கை
இந்நிலையில் நேற்று மோடியிடம் பேசிய அப்பாஸ், பாலஸ்தீனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்ற பிரதமர் மோடி, இஸ்ரேல் உடனான எல்லைப் பிரச்னைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்கு இந்தியா பாலஸ்தீனுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு இரு தலைவர்களும் பேட்டியளி்த்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
சுதந்திரமாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படக்கூடிய வலிமையான பாலஸ்தீன் உருவகும் என்றும், இஸ்ரேல் உடனான பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்றும் இந்தியா நம்புகிறது.
கலாசார உறவுகள்
இந்த விஷயத்தில் பாலஸ்தீனுக்கு இந்தியா எப்போது தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்பட்டு நிரந்தர தீர்வு உருவாகும் என்றும் இந்தியா நம்புகிறது. இந்தியா வந்துள்ள பாலஸ்தீன் அதிபர் மகமூது அப்பாஸ் மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவில் நிலவும் அரசியல் சூழல்கள், சவால்கள் குறித்து என்னிடம்விரிவாக பேசினார். இருதரப்பு உறவை பொருத்தவரையில், பாலஸ்தீன் வளர்ச்சிக்கு உதவும் கூட்டாளியாக இந்தியா விளங்கும். தன்னால் முடிந்த அளவுக்கு பாலஸ்தீன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் இந்தியா செய்யும். யோகா போன்ற கலாசார உறவுகளையும் பாலஸ்தீனுக்கு அளிக்க இந்தியா விரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
வலிமையான இந்தியா
பாலஸ்தீன அதிபர் மகமூது அப்பாஸ் பேசுகையில், பாலஸ்தீனுக்கு இந்தியா அளித்து வரும் உதவி மற்றும் ஆதரவுக்காக நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தியா எங்களது நண்பன். சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உள்ளது. இஸ்ரேல் உடனான எங்களது பிரச்னைக்கு தீர்வு காண்பதில் உதவி செய்யக்கூடிய வலிமை இந்தியாவுக்கு உண்டு. இஸ்ரேல் பிரச்னை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்டோரிடம் பேசினேன். இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். தீவிரவாதம் எந்தவகையில் வந்தாலும் அதனை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் நரேந்திர மோடி - பாலஸ்தீன் அதிபர் மகமூது அப்பாஸ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தூதரக அதிகாரிகளுக்கு விசாவை நீட்டிப்பு செய்வது, வேளாண் ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், சுகாதாரம், இளைஞர் நலன், விளையாட்டு ஆகிய துறைகளின் கீழ் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.