காசா மீது முழு முற்றுகையை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பாலஸ்தீனத்தின் காசா பிராந்தியத்தில், முழுமையான முற்றுகைக்கு உத்தரவிட்டுள்ளார். “நாங்கள் காசாவை முழுவதுமாக முற்றுகையிடுகிறோம். மின்சாரம் வழங்கப்படாது; உணவு வழங்கப்படாது; தண்ணீர் வழங்கப்படாது; எரிவாயு வழங்கப்படாது; அனைத்தும் மூடப்படும்.” என யோவ் கேலண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாங்கள் விலங்குகளுடன் போராடுகிறோம், அதன்படி செயல்படுகிறோம் என்று ஹுப்ரூ மொழியில் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இடையே போர் மூண்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு அமைப்புகளை மீறி இஸ்ரேலுக்குள் புகுந்த பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என ஹமாஸ் அமைப்பினர் பெயர் வைத்துள்ளனர். அதேபோல், காசா முனையில் ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை துவக்கியுள்ளது.
மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் இந்த போரில், இரு தரப்பிலும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐத் தாண்டியுள்ளது. போர் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இரு தரப்பிலும் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காசா முனைக்கு எதிராக முழு முற்றுகையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால், இது ஒரு போர் குற்றம் என கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் உதவியுடன் இயங்கும் இஸ்ரேல், பொதுவாகவே வரம்புகளை மீறி செயல்படும் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அடிப்படை வசதிகள் அனைத்தும் முடக்கப்படும் என மீண்டும் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் அறிவித்தது ஒரு போர்க் குற்றம் எனவும், மனித குலத்திற்கு எதிரான குற்றத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாடு வெளியிட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து, இஸ்ரேல் எனும் தனி நாட்டை அமைத்துக் கொண்டனர். காசா மலைக்குன்று, மேற்குகரை பகுதி மட்டுமே பாலஸ்தீனத்தின் பிராந்தியங்களாக உள்ளன. இதனிடையே, 2007ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் காசா மலைக்குன்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் ராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இஸ்ரேலுக்கு உதவ போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!
ஏற்கனவே, காசா முனைக்கு பல்வேறு வசதிகளை தடுத்து நிறுத்தி உலகின் மிகப்பெரிய open-air prison எனப்படும் திறந்தவெளி சிறையாகவே காசாவை இஸ்ரேல் வைத்துள்ளது. காசாவில் உள்ள 10 பாலஸ்தீனியர்களில் 7 பேர் அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த முழு முற்றுகை ஒன்றும் காசாவுக்கு புதிதல்ல. உதாரணத்துக்கு, ஏற்கனவே அங்கு 22 மணி நேரம் மின்சாரம் இருக்காது. இஸ்ரேல் அறிவிப்பால் தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் இருக்காது. காசாவில் வறுமை மற்றும் உணவுப் பற்றாக்குறையால் 7 சதவீத குழந்தைகள் நீண்ட கால ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். 60 சதவீத குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தரவுகள் கூறுகின்றன.
இந்த சூழலில், போர் குற்றத்தின் கீழ் வரும், மனித நேயத்திற்கு எதிரான, மின்சாரம் வழங்கப்படாது; உணவு வழங்கப்படாது; தண்ணீர் வழங்கப்படாது; எரிவாயு வழங்கப்படாது; அனைத்தும் மூடப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது என பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.