
தண்ணீர் துப்பாக்கி மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்வது போல் கேலி செய்து வீடியோ வெளியிட்ட இந்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டெக்சாஸ் மாநிலம், தல்லாஸ் நகரில் உள்ள ஆடம்சன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பயல் மோடி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.கடந்த 20-ந்தேதி டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற போது, 8 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோவைஇன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பயல் மோடி பரப்பிவிட்டார்.
அந்த வீடியோவில், அதிபர் டிரம்ப் புகைப்படத்தின் மீது, தண்ணீர் துப்பாக்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து, அவரை கொன்றுவிட்டேன் என்று சத்தமிடுவதுபோல் இந்த அதில் இருந்தது. இந்த வீடியோவை ஏறக்குறை 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்து ‘லைக்’ செய்தனர்.
இது வீடியோ வைரலாகப் பரவியதையடுத்து, தல்லாஸ் மாவட்ட பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஆசிரியர் பயல் மோடியை சஸ்பெண்ட் செய்தது.
இது குறித்து தல்லாஸ் மாவட்ட பள்ளி நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் ராபின் ஹாரிஸ் கூறுகையில், “ ஆசிரியர் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விடுமுறையில் சென்றுள்ளார். அதிபர் படத்தின் மீது தண்ணீர் துப்பாக்கி கொண்டு சுட்டது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைப் பார்த்தோம். அவரிடம் முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது '' என்றார்.
ஆசிரியர் மோடியின் செயல்பாடு முறையில்லாதது என்று இந்த வீடியோவைப் பார்த்த சில மாணவர்கள், கருத்து தெரிவித்தனர்.அதேசமயம், இதுபோன்ற செயலை அவர் வேண்டுமென்றே செய்யவில்லை, நகைச்சுவைக்காக மட்டுமே செய்தார் என்றும் சிலர் கூறுகின்றனர் என சி.என்.பி.சி. செய்திகள் தெரிவிக்கின்றன.