இந்தியாவின் தேவைக்கு ஏற்ப ரஃபேல் போர் விமானங்களில் மாற்றங்கள் செய்தல், ஆயுதங்களை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிரான்சின் dazzled நிறுவனத்திற்கு இவர் உதவி செய்துள்ளார்.
இந்தியாவின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்குப் பின்னர், ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுதி இன்று இந்தியா வந்தடைந்துள்ளது. பிரான்சிலிருந்து 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து, 5 ரஃபேல் போர் விமானங்கள் புதன்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் அம்பாலா விமான நிலையத்தில் தரையிறங்கின. ரஃபேல் சிறிது நேரம் அம்பாலா வான்பரப்பில் வட்டமிட்டு விண்ணதிர கர்ஜித்து பின்னர் ஏர்பேஸில் சுமூகமாக தரையிறங்கியது. கம்பீரமான இந்த போர் விமானத்தை இந்திய மண்ணில் முதலில் தரையிறங்கியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விங் கமாண்டர் ஹிலால் அஹ்மத் ரதர். ரஃபேல் இந்தியாவின் வான்வெளியில் நுழைந்தபோது, அதை ஐ.என்.எஸ் கொல்கத்தா தொடர்பு கொண்டு வரவேற்றது. இந்த கடற்படைக் கப்பல் ரஃபேல் படையினரை அணுகி, 'அம்புத் தலைவரே... இந்தியப் பெருங்கடலுக்கு வருக... ஹேப்பி லேண்டிங், ஹேப்பி ஹண்டிங். என வரவேற்பு அளித்தது. இந்த உணர்ச்சிமிகு நிகழ்வுக்குப் பின்னர், அம்பால விமான தளத்தை நெருங்கிய நிலையில் முதல் ரபேல் விமானத்தை இந்திய மண்ணில் தரையிறக்கிய "தில்" லுக்கு சொந்தக்காரராகி இருக்கிறார் இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் ஹிலால் அஹ்மத் ரதர்.
ரஃபேல் விமானத்திற்கு இணையாக இந்தியர்களின் நாவில் தற்போது உணர்ச்சி பொங்க உச்சரிக்கப்படும் பெயராகவும் ஹிலால் அஹ்மத் ரதர் மாறியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சுமார் 58,000 கோடி ரூபாய் செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்-8 ஆம் தேதி, மூன்றாவது ரஃபேல் விமானத்தை பிரான்ஸ் அரசிடம் இருந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறையாக பெற்றுக்கொண்டார், இந்நிலையில் 5 ரஃபேல் போர் விமானங்கள் புதன்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் இந்தியா வந்தடைந்துள்ளது. 1997ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு பிறகு இறக்குமதி செய்யப்படும் முதலாவது போர் விமானம் என்ற பெருமையை ரஃபேல் பெற்றுள்ளது. இந்த ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள், இந்தியா பிரான்சிலிருந்து வாங்கும் 36-சூப்பர் சோனிக் ஓம்னிரோல் போர் விமானங்களின் முதல் தொகுதி ஆகும். இப்போது வரை, 12 ஐ.ஏ.எஃப் போர் விமானிகள், பிரான்சில் உள்ள ரஃபேல் போர் விமானங்களில் தங்கள் பயிற்சியை முடித்துள்ளனர்.
மேலும் சிலர் தங்கள் பயிற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளனர். இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் மொத்தம் 36 ஐ.ஏ.எஃப் விமானிகளுக்கு பிரெஞ்சு விமானிகள் ரஃபேல் போர் ஜெட் விமானங்களில் பயிற்சி அளிக்க உள்ளனர். பெரும்பாலான ஐ.ஏ.எஃப் விமானிகள் பிரான்சில் பயிற்சி பெறுவார்கள், அவர்களில் சிலர் இந்தியாவில் பயிற்சிக்கு வருவார்கள். இந்நிலையில் ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு விரைந்து கிடைக்கவும், பயிற்சிகள் சரியான பாதையில் இயங்கவும் உறுதுணையான இருந்தவர் ஹிலால் அஹ்மத் ரதர் ஆவார். ஹிலால் அஹ்மத் ரதர், பாரம்பரியமிக்க ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை அப்துல்லாஹ் 1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடந்த போரில் ஈடுபட்டு சேனா மெடல் பெற்றவராவார். அவரது தந்தை அந்தப் போரின்போது காணாமல் போனார் என்று கூறப்பட்டது.அவரின் சீருடை மட்டுமே அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது, பிறகு மூன்று மாதங்கள் கழித்து அவர் உயிருடன் திரும்பி னார். பின்னர் அவர் தொடர்ந்து ராணுவத்தில் பல்வேறு பணிகளை வகித்து ஓய்வு பெற்றார்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தில் தனது பெற்றோருக்கு ஒரே மகனாக பிறந்த ஹிலால், பள்ளி கல்லூர் படிப்பை முடித்து, டிசம்பர் 17, 1988 அன்று இந்திய விமானப்படையில் ஒரு போர் விமானியாக பணி நியமனம்பெற்றார். அவர் 1993 இல் விமான லெப்டினன்ட்டாகவும், 2004 இல் விங் கமாண்டராகவும் பதிவு உயர்வு பெற்றார், 2016 இல் குழு கேப்டன் மற்றும் 2019-இல் ஏர் கமடோர் ஆனார். பாதுகாப்பு சேவைகள் ஊழியர் கல்லூரியில் (டி.எஸ்.எஸ்.சி) பட்டம் பெற்றார். இவர் யுத்தக் கல்லூரியிலும் (அமெரிக்கா) பட்டம் பெற்றுள்ளார். அவர் என்.டி.ஏவில் மரியாதைக்குரிய பட்டயங்களை வென்றார். விபத்தில்லாமல் விமானங்களை இயக்கிய சிறந்த போர் விமானி என்ற பெருமைக்காக, வாயு சேனா பதக்கம் மற்றும் விஷிஷ்த சேவா பதக்கத்தைப் பெற்ற ஹிலால், வெவ்வேறு விமானங்களில் 3,000 விபத்து இல்லாத பறக்கும் நேரங்களைப் பதிவு செய்துள்ளார். அனுபவத்தின் காரணமாக, பிரான்ஸில் இருந்து ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பு ஹிலாலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது அசாத்தியமான திறமையால் விமானங்களை திட்டமிட்டபடி இந்திய மண்ணிற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார் அவர். அதுமட்டுமின்றி இந்தியாவின் தேவைக்கு ஏற்ப ரஃபேல் போர் விமானங்களில் மாற்றங்கள் செய்தல், ஆயுதங்களை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிரான்சின் dazzled நிறுவனத்திற்கு இவர் உதவி செய்துள்ளார். இதற்கு பிரான்சில் சில ஆண்டுகள் தங்கியிருந்து அதற்கான பயிற்சிகளை இவர் மேற்கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் இருந்து புறப்பட்ட ரஃபேலை எரிபொருள் நிரப்புவதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்டில் இறங்கிய இவர், விமானத்தை மிகத் துல்லியமாகவும், நேர்த்தியாகவும் இயக்கி, அம்பாலா விமானதளத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். இந்திய விமானப்படையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ரஃபேல் போர் விமானங்களை முதல் முதலாக இயக்கிய இந்திய பைலட் என்ற பெருமை ஹிலாலையே சாரும். ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவராகவும் இவர் செயல்பட்டுள்ளார். விங் கமாண்டர்களில் அதிமுக்கியமானவராக கருதப்படும் இவரைப் பற்றி, இன்னும் பல்வேறு தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.