பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரையான காலத்தில், ஸ்விஸ் வங்கியில் மேற்கொள்ளப்படும் இந்தியர்களின் முதலீடு 80 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியர்களின் கறுப்புப் பணம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் முறைகேடாக பதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல், கடந்த 40 ஆண்டுகளாக, இந்திய அளவில் பேசப்படுகிறது. எனினும், உறுதியான ஆதாரங்களோ, நடவடிக்கையோ இதுவரை எடுக்கப்படவில்லை.
2014ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டெடுப்பேன் என உறுதி அளித்தார். இதற்கான பணிகளையும் அரசு தொடங்கியது. எனினும், அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தற்போது ஸ்விட்சர்லாந்து அரசு சார்பாக, இந்தியாவுக்கான அந்நாட்டு தூதரர் ஆன்ட்ரூஸ் பாம், மத்திய நிதித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு: ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் கறுப்புப் பணத்தை பதுக்கி வைப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இது முழுவதும் உண்மையல்ல. பெரும்பாலான இந்திய தொழிலதிபர்கள் உள்நாட்டு வங்கிகளில் கடன் வாங்கி, அந்த பணத்தை அப்படியே ஸ்விஸ் வங்கிகளுக்கு மாற்றிவிடுவார்கள். இதனால், இந்திய அரசுக்கும், வங்கிகளுக்கும் இழப்பீடு ஏற்படும். ஸ்விஸ் வங்கிகளின் வர்த்தகம் அதிகரிக்கும். இதனை கருப்புப் பணம் என்று சொல்ல முடியாது. இத்தகைய பண முதலீடு கடந்த 4 ஆண்டுகளாகக் குறைய தொடங்கியுள்ளது.
குறிப்பாக, பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் கறுப்புப் பணத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், ஸ்விஸ் வங்கிகளில் செய்யப்படும் முதலீடு 80 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் விவரத்தை கணக்கெடுத்து வெளியிடும் வகையில், கடந்த 2017, டிசம்பர் 21ம் தேதி இரு அரசுகளும் ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளன. இதன் அடிப்படையில் தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி, பிரதமர் மோடியின் நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றிகளில் முக்கியமானது என்று, பாஜக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அண்மையில் தான் கடந்த ஓராண்டில் இந்தியர்களின் முதலீடு சுவிட்ஜர்லாந்து வங்கிகளில் அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் வங்கிகள் கூறியிருந்தன. இந்த நிலையில் அந்த கருத்தை மறுத்து சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.