வடக்கு எல்லைப் பகுதியில் பீரங்கிகளுடன் அணிவகுக்கும் இந்திய ராணுவம்..!! இராஜதந்திர நடவடிக்கையில் இறங்கிய மோடி..

By Ezhilarasan BabuFirst Published May 28, 2020, 2:18 PM IST
Highlights

இருநாடுகளுக்கும் எல்லை விவகாரத்தில் நல்ல புரிதல் உள்ளது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு உறவும் நல்ல நிலையில் உள்ளன. 
 

உலக அளவில் அணு ஆயுத சக்தி நாடுகளான இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.  அதை தடுப்பதற்கான பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தோல்வியில் முடிந்ததையடுத்து, சீனாவுடன் ஒரு நீண்ட போருக்கு இந்தியா தயாராகி  வருவதாகவும், அதனால் வடக்கு எல்லைப் பகுதியில் கூடுதல் படைகளை  குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  சீனா ஏற்கனவே எல்லையில் 5000 வீரர்களுடன் கவச வாகனங்களை எல்லைக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ள நிலையில்,  சீன ஊடுருவலை தடுக்க இந்தியா மிகப்பெரிய எண்ணிக்கையிலான ராணுவத் துருப்புகளையும், பீரங்கி துப்பாக்கிகளையும் எல்லை நோக்கி நகர்த்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். திபெத்திய பீடபூமியில் 14,000 அடி உயரத்தில் உள்ள பனிப்பாறை ஏரியான பாங்கொங் த்சோ கரையில் கடந்த மே-5 ஆம் தேதி இரு நாட்டு  படை வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

அதில் இருபுறமும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். அப்போதிலிருந்து தொடர்ச்சியாக எல்லையில் இருநாடுகளும் படைகளை குவித்து வருகின்றன. இந்நிலையில் மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் டெல்லி மற்றும் பீஜிங்கில் உள்ள தூதர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அப்போச்சு வார்த்தை தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளது என கூறினார். ஆனால் இந்தியாவோ அல்லது சீனாவோ அதற்கு எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. இந்நிலையில் எல்லைப்பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும்  பாதுகாக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர்,  இருநாடுகளுக்கும் எல்லை விவகாரத்தில் நல்ல புரிதல் உள்ளது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு உறவும் நல்ல நிலையில் உள்ளன. 

அதேபோல் இரு நாட்டு தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்துக்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களை கவனத்துடன் பின்பற்றி வருகிறோம்.  இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்சினைகளை உரையாடல்கள் மற்றும் ஆலோசனைகள் மூலம் பேசி தீர்ப்பதில் நாங்கள் வல்லவர்கள், என லிஜியான் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இப்பிரச்சினையை ராஜதந்திர ரீதியில் அனுக முடிவு  செய்துள்ளார் எனவும், அதனால்  பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றும்,  பிரதமர் அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் உறுப்பினர் எஸ்.எல் நரசிம்மன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்தியா தனது இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதியுடன் பாதுகாக்கும்.  அதேநேரத்தில் இந்திய-சீன எல்லையில் அமைதியை பேணுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!