இந்தியாவும் அதற்கு சளைக்காமல் எல்லை நோக்கி படைகளை நகர்த்தி வருவதுடன், பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்பதை தன் நடவடிக்கைகள் மூலம் சீனாவுக்கு உணர்த்திவருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய-சீன எல்லையில் பதற்றம் , மறுபுறம் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு போன்ற அசாதாரன சூழல்கள் நிலவி வரும் நிலையில் , சீனா தனது குடிமக்களை இந்தியாவிலிருந்து வேகவேகமாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள சீன தூதரகம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது . இந்தியாவில் சிக்கியுள்ள மாணவர்கள் , சுற்றுலா பயணிகள், வர்த்தக ரீதியாக இந்தியாவிற்கு வந்தவர்கள், சிறப்பு விமானம் மூலம் சீனாவுக்குள் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சீன தூதரக இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பரபரப்பு மிகுந்த இந்த சூழலில் எத்தனை சீன மாணவர்கள் இந்தியாவில் படிக்கின்றனர், எத்தனை சீனர்கள் இந்தியாவில் வேலை செய்கின்றனர், என்பது குறித்த புள்ளி விவரங்கள் துல்லியமாக கிடைக்கவில்லை. ஆனால் பீஜிங்கிற்கு திரும்பி செல்ல விரும்புவோர் மே-27 ஆம் தேதி காலைக்குள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்யும்படி இந்தியாவில் உள்ள தன் குடிமக்களை சீனா கேட்டுக்கொண்டுள்ளது .
யோகாவிற்காக அல்லது புத்தமத யாத்திரைக்காக இந்தியாவுக்கு வந்த சீன குடிமக்களுக்கும் சேர்த்தே இந்த அறிவிப்பு என அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு விமானம் எப்போது புறப்படும் என்பது பற்றி எந்த விவரமும் அதில் இல்லை . இந்தியாவுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் , இந்தியாவிலிருந்து தனது குடிமக்களை அவசரமாக வெளியேற்ற சீனா இந்த முடிவை எடுத்துள்ளதா.? அல்லது, சீனா இந்தியாவுடன் போருக்கு தயாராகிவிட்டதா.? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எல்லையில் சீனா வேகவேகமாக படைகளை குவித்து வரும் நிலையில் , அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கருதுகின்றனர். அதேபோல் திங்கட்கிழமை அன்று( நேற்று ) மாண்டரின் மொழியில் கொடுக்கப்பட்ட அறிவிப்பில் பீஜிங் திரும்புவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கான தங்கள் வாடகைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது . அதேபோல் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதன் அறிகுறி உள்ளவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கோவிட் 19 நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உடல் வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸைவிட அதிகமாக இருக்கும் சீனர்கள் தங்கள் மருத்துவ வரலாற்றை மறைக்க வேண்டாம் எனவும் தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. அதாவது கொரோனா வைரஸ் நோய் தொற்றின் மையமான வூபே மாகாணத்திலிருந்தும், சீனாவிலிருந்தும் தனது குடிமக்களை திரும்ப அழைத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் , இப்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது, அதேநேரத்தில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது , இதன் காரணமாக தனது குடிமக்களை சீனா திரும்ப அழைக்கிறதா.? அல்லது எல்லையில் போர்மேகம் சூழ்ந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது குடிமக்களை திரும்ப அழைத்துக் கொள்கிறதா.? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எல்லையில் தனது படைகளை தொடர்ந்து குவித்து வரும் சீனா போருக்கு ஆயுத்தம் ஆவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் , இந்தியாவும் அதற்கு சளைக்காமல் எல்லை நோக்கி படைகளை நகர்த்தி வருவதுடன், பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்பதை தன் நடவடிக்கைகள் மூலம் சீனாவுக்கு உணர்த்திவருவது குறிப்பிடத்தக்கது.