பாங்கொங் த்சோ ஏரி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு, சீன அதிகாரிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறியுள்னர்.
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீன எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்தியது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழந்திருப்பது நாட்டை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி பாங்கொங் த்சோ ஏரிப்பகுதியில், இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருதரப்பு வீரர்களும் படுகாயமடைந்தனர், அதைத்தொடர்ந்து உள்ளூர் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பதற்றம் தணிந்தது. அதைத்தொடர்ந்து மே 9-ஆம் தேதி சிக்கிம் அருகே உள்ள நகுலா பாஸ் பகுதியில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர், அங்கு ஏற்பட்ட பதற்றம் பேச்சுவார்த்தை மூலம் தணிக்கப்பட்டது.
மே 22-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்து விட்டதாக கூறி ஏராளமான படைகளைக் சீனா குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் அதற்கு பதிலளிக்கும் வகையில் படைகளையும், போர் தளவாடங்களையும் குவித்ததால் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என சீனா முன்வந்ததையடுத்து, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முன்வைத்த பல்வேறு கருத்துக்களை ஏற்றுக் கொண்ட சீனா, பாங்கொங் த்சோ ஏரிப்பகுதி மற்றும் விரல்-4 பகுதி விவகாரத்தில் உடன்பட மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் சீன ராணுவம் எல்லையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பின் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனாலும் பாங்கொங் த்சோ ஏரி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு, சீன அதிகாரிகள் இந்திய எல்லைக்குள்அத்துமீறியுள்னர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும், அத்துமீறி நுழைந்த சீன படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சீன ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்திய வீரர்கள் எல்லையில் அத்துமீறி நுழைந்ததால் இந்த விபரீதம் நடந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் சீன ராணுவத்தின் நடவடிக்கைக்கு இந்தியா பதில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் அது நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் சீன வெளியுறவு துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்திய ராணுவத்தினர் தாக்கியதில் சீன ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது எல்லையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.